நிலவரம் சரியில்லை என்றாலும் மல்லுக்கட்டு வடக்கு தொகுதியில் சீட் கேட்டு வரிந்து கட்டும் அ.தி.மு.க.,வினர்: தேறாது என்று தெரிந்து விட்டதால் கூட்டணிக்கு தள்ளிவிட தலைமை முடிவு

சேலம்: சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுகவினர் வரிந்து கட்டி நிற்கின்றனர். ஆனால் மக்களின் அதிருப்தி காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மாநகராட்சி பகுதிக்குள் 22 வார்டுகளையும், கன்னங்குறிச்சி பேரூராட்சியையும் உள்ளடக்கியது சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியாகும். 1951ம் ஆண்டு, சேலம் 2வது தொகுதியாக இது உருவாக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும், ஜனதா கட்சி, தேமுதிக போன்றவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி 2011ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு சேலம் வடக்கு தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக- அதிமுக நேரடியாக களம் கண்டது. இதில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

வடக்கு தொகுதியை எடுத்துக்கொண்டால் சேலத்தில் தலைநகரமே இத்தொகுதியில் தான் இருக்கிறது என்றால் அதுமிகையில்லை.

மாவட்ட கலெக்டர் அலுவலகம், அவரது பங்களா, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, மாநகர போலீஸ் கமிஷனர் பங்களா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்களா, மத்திய சிறைச்சாலை என அனைத்து முக்கிய அலுவலகங்களும் இங்கு தான் இருக்கிறது. அதே நேரத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்களின் வீடுகளும் இங்கு தான் அமைந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 22 வார்டுகளில் நெசவு, வெள்ளி கொலுசு தொழில் ஆகியவை முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கன்னங்குறிச்சி பகுதி விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது. வன்னியர் இன மக்கள் அதிகம் என்றாலும், முதலியார், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களும் இங்கு வசித்து வருகிறார்கள்.தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2 முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவும், திமுகவும் வெற்றிபெற்றுள்ளதால் இம்முறை அதிமுக, கூட்டணி கட்சிக்கே தொகுதியை கொடுத்துவிட திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தேறாது என்று தலைமை முடிவு செய்தாலும் கடந்த முறை தோல்வி அடைந்த சரவணன், மீண்டும் களம் இறங்க தயாராகி வருகிறார். அதே நேரத்தில் சேலம் மாஜி எம்பி பன்னீர் செல்வம், வழக்கறிஞர்கள் அய்யப்பமணி, விவேகானந்தன் உள்ளிட்டோரும் களத்தில் குதிக்க தயாராக இருக்கிறார்கள். பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, முருகன் ஆகியோரும் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் இந்த முறை இத்தொகுதியை கூட்டணி கட்சிக்கே கை கழுவி விட அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இது கூட்டணி கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவை பொறுத்தவரை மாநில துணை பொதுச் செயலாளராக இருக்கும் அருளுக்கு எப்படியும் சீட் கொடுத்தே ஆக வேண்டும் எனவும் இதற்காக மேற்கு தொகுதியை கேட்டு அக்கட்சியின் தலைமை நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு பிடி கொடுக்காத அதிமுக, வடக்கு தொகுதியை பெற்றக்கொள்ளுமாறு கூறி வருகிறது. தொகுதி சீரமைப்புக்கு முன்பு சேலம் 2 என்ற பெயரில் இருந்தபோது, பாமக சார்பில் கார்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் வன்னியர் அதிகமாக இருக்கிறார்கள் என கூறப்பட்டாலும் பாமக போட்டியிட தயங்குவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முழுக்க முழுக்க வன்னியர் பெல்ட் என்றிருந்த தொகுதியை சீரமைப்பில் மேற்கு தொகுதியில் சேர்த்து விட்டதன் காரணமாக பாமகவினர் கோட்டை தகர்ந்ததுவே இந்த பின்வாங்கலுக்கு காரணமாகும். இதனால்தான் பாமக வடக்கு தொகுதியை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் வடக்கு தொகுதியில் போட்டியிட மாநகர் மாவட்ட பாமக செயலாளர் கதிர்.ராஜரத்தினம் விண்ணப் பித்துள்ளார். கடந்த தேர்தலில் இவர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 8 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கினார்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என தேமுதிக தலைமை கூறி வந்தாலும் மிகவும் குறைந்த அளவிலான சீட் ஒதுக்குவதாக அதிமுக கூறி வருகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற தேமுதிக திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வடக்கு தொகுதியை தேமுதிகவுக்கு தள்ளிவிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்பட்டால் அழகாபுரம் மோகன்ராஜ், சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தான் முன்னணி தலைவர்கள் பட்டியலில் உள்ளனர்.

ஏற்கனவே அழகாபுரம் மோகன்ராஜ் எம்எல்ஏவாக இருந்ததால் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவர் 1989ம் ஆண்டு சேலத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை துவக்கியவர். கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்திடம் விசுவாசமாக இருந்து வருவதால் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அழகாபுரம் மோகன்ராஜ் சேலம் மேற்கு தொகுதியையும், ராதாகிருஷ்ணன் சேலம் தெற்கு தொகுதியையும் விரும்பி கேட்டு வருகின்றனர். ஆனால் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதியை நினைத்து தேமுதிக தொண்டர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

எம்எல்ஏ மீதான ஈர்ப்பும் தயக்கத்திற்கு ஒரு காரணம்

தற்போது இந்த தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் ராஜேந்திரன் உள்ளார். எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் தொகுதி முழுக்க வலம் வந்து பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளார். வாரம் தோறும் அவர் நடத்தும் மக்கள் சந்திப்பு கூட்டங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் தொகுதி சார்ந்த பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் ஆளுங்கட்சி விலகி நிற்கும் போது, மக்களை திரட்டி போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இதனால் அவர் மீது தொகுதி மக்களுக்கு உள்ள ஈர்ப்பும் அதிமுக மீண்டும் போட்டியிட தயங்குவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நொந்து நூலாகி போன நெசவுதொழிலாளர்கள்

சேலம் வடக்கு தொகுதியை பொறுத்தவரை நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். இதில் அம்மாப்பேட்டை பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நெசவுத் தொழில் அழிவின் விழிம்பிற்கே சென்றுவிட்டது. ஜிஎஸ்டி, நூல்விலையேற்றம், விசைத்தறியில் கைத்தறியின் ஆதிக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் ெநசவு தொழிலாளர்கள், நொந்து நூலாகி நிற்கின்றனர். ஆட்சியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்ற கடும் அதிருப்தி நெசவாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இது வரும் ேதர்தலில் எதிரொலிக்கும் என்பது நெசவாளர் சங்கங்களின் குமுறல்.

Related Stories: