மேலூர் தொகுதியில் சீட் கேட்டு மூட்டை மூட்டையாக பணத்துடன் முற்றுகையிடும் அதிமுக மாஜிக்கள்

* சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக கிளம்புது படை

* உள்குத்துகளுக்கு வாய்ப்பால் தலைமை தயக்கம்

மேலூர்: மேலூர் தொகுதியில் அதிமுகவில் எப்படியாவது இம்முறை சீட் பெற்று விட வேண்டுமென முக்கிய பிரமுகர்கள் களமிறங்கி உள்ளனர். பணபலத்தோடு சிட்டிங் எம்எல்ஏ உடபட பலரும் சீட்டுக்காக மோதுவதால், எதிர்தரப்புக்கு சீட் சென்று விடாமல், உள்ளடி வேலை பார்க்கும் நிலையும் எகிறி இருக்கிறது. இதற்காக தலைமைக்கும் தூது விட்ட வண்ணம் உள்ளனர். மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் மேலூர் சட்டமன்ற தொகுதியும் அடக்கம். இந்த தொகுதி உருவான காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. காங்கிரஸ் கட்சி தனித்தும், திமுக கூட்டணியிலும் இங்கு நின்று ஏறக்குறைய 9 முறைக்கு மேல் இந்த தொகுதியை வென்றதே அதற்கு சாட்சி.

பின்னர் அதிமுக சார்பில் மேலூர் சாமி போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 3 முறை வென்ற அவருக்கு கடந்த தேர்தலில் ஜெயலலிதா சீட் தர மறுத்தார். இதையடுத்து பெரியபுள்ளானுக்கு சீட் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவராக இருந்த அவர் எம்எல்ஏவாக மாறினார். இதனால் விரக்தியடைந்த சாமி அமமுகவுக்கு சென்றார். சாமி உயிரிழந்தாலும் அவரது ஏராளமான ஆதரவாளர்கள் அமமுகவில் உள்ளனர். இதனால் அதிமுக ஓட்டுகள் இம்முறை கடுமையாக பிரியுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், இம்முறை அதிமுக தரப்பில் சீட் கேட்டு முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் களத்தில் குதித்துள்ளனர். சிட்டிங் எம்எல்ஏவான பெரியபுள்ளான் தனக்கு சீட் வேண்டும் என முதல் ஆளாக துண்டு போட்டு வைத்துள்ளார். மேலூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் நிற்க சீட் கேட்டு தலைமையிடம், மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழரசன் போராடினார். ஆனால் அப்போது அவருக்கு மதுரை கிழக்கு தொகுதி தரப்பட்டது.

கடந்த 2016 தேர்தலில் சாமி, தமிழரசன் என இருவருமே சீட்டுக்கு மல்லுக்கட்டினர். கடைசியில் இருவருக்கும் இல்லாமல் பெரியபுள்ளானுக்கு சீட் கிடைத்தது தனிக்கதை. இந்த தேர்தலில் எப்படியும் தலைமையிடம் கட்டி உருண்டு சீட்டை பெற்று மேலூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பது தமிழரசனின் எண்ணமாக உள்ளது.அதே நேரம் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும், கிரானைட் அதிபருமான பெரியசாமி (எ) துரைப்பாண்டியும் களத்தில் இறங்கி சீட் பெற போராடி வருகிறார். இவருக்கு மாவட்ட செயலாளரின் பூரண ஆசி உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் செல்வந்தரான இவர் பணத்தை அடித்தாவது சீட் பெறுவேன் என பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறாராம். இவரை தொடர்ந்து மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் உள்ள ஜாபர் களத்தில் உள்ளார். கொங்குமண்டல அமைச்சருடன் நெருக்கமான இவர் பல்வேறு தரப்பிலும் சீட்டுக்காக முட்டி மோதி வருகிறார்.

மேலூரின் மற்றொரு கிரானைட் அதிபரான பாலகிருஷ்ணனும் சீட்டை எப்படியாவது பெற்று விடுவது என முழு முயற்சியில் இருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து நிர்வாகிகள் கொட்டாம்பட்டி ராஜேந்திரன், குலோத்துங்கன், மேலூர் நகர் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் அம்பலம் என மேலூருக்கு சீட் கேட்டு ஒரு பெரும் பட்டியல்  நீண்டு கிடக்கிறது. ஒவ்வொருவரும் தேர்தல் செலவிற்கு தேவையான பண பலத்துடன் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைத்தால், மற்றொருவர் அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்து விடுவாரோ எனவும் அதிமுக மேலிடம் அஞ்சி வருகிறது. நாள்தோறும் தங்களுக்கு சீட் கேட்டு, மேலூர் முக்கிய அதிமுக பிரமுகர்கள் சென்னைக்கு பறந்தவண்ணம் உள்ளனர். இதனால் யாருக்கு சீட் வழங்குவது என தலைமையும் மண்டை காய்ந்து வருகிறதாம்.

வாக்கு மட்டுமே கொடுக்கும் வாய்ச்சொல்லில் வீரர்கள்

காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த மேலூரில், முதலில் அதிமுகவில் சாமி வென்றார். இவர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிறைவேற்றிய நிலையில், அடுத்த முறை வென்றதும் தீர்க்கிறேன் எனக்கூறி அடுத்தடுத்து என மொத்தம் மும்முறை வென்றார். ஆனால் எதுவுமே அவர் எதுவும் செய்யவில்லை. இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மேலூர் பஸ் ஸ்டாண்டிற்கு மாற்று இடமாக நான்கு வழிச்சாலையில் தேர்வான இடம் அப்படியே இருக்கிறது. நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப பாதாளச்சாக்கடை வசதியை கொண்டு வருவதாக தெரிவித்தார். அவர் காலத்திலும் நிறைவேற்றவில்லை. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ, பெரியபுள்ளானும், ரூ.40 கோடியில் திட்டம் போட்டதோடு சரி. அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

இப்பகுதியில் கிரானைட் குவாரிகள் அனைத்துமே பிரச்னைகளில் சிக்கி மூடப்பட்டுள்ளதால், வேலையிழந்த தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடுகள் எதுவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்படவில்லை. இதனால் மேலூர் பகுதி மக்கள் வேலை இழப்பில் விரக்தியுடன் உள்ளனர். இதேபோல், கொட்டாம்பட்டி பகுதியில் தென்னை உற்பத்தி அதிகமிருப்பதால், அதிமுக எம்எல்ஏவாக சாமி பொறுப்பேற்றபோது, தென்னைக்கு வாரியம் அமைத்து, தென்னை பொருட்களுக்கு மதிப்புக் கூட்டி தென்னை விவசாயிகளுக்கு வாழ்வளிக்கப்படும் எனக்கூறிய வாக்குறுதியும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இப்படி கடந்த 4 முறையும் பொறுப்பில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே காலம் கழித்து போய் விட்டார்கள்.

Related Stories:

>