சட்டமன்ற தேர்தல்2021 ரவுண்ட்அப் குன்னூரில் நீடிக்கும் முட்டல், மோதல்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் சட்டமன்ற தொகுதி முக்கியமானது. கடந்த 2008ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, இத்தொகுதியில், கோத்தகிரி தாலுகா மற்றும் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள், அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்டன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி) பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்துள்ளனர். இப்பகுதியில் தேயிலைத்தூள் ஏல மையம் உள்ளது. மலை காய்கறிகள் சாகுபடியும் இத்தொகுதியில் அதிகளவில் நடக்கிறது.

இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்த சாந்தி ராமு உள்ளார். தற்போது, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதில் மும்முனை போட்டி நிலவுகிறது.  தற்போதுள்ள குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மீது குன்னூர் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்,  துக்க நிகழ்வுகளிலும் மட்டுமே பங்கேற்று தலையை காட்டி செல்வதாகவும், இதுநாள் வரை அவரது அலுவலகத்தில் அமர்ந்து, பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்டது கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளது.  இருப்பினும், இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட சாந்தி ராமு தயராகி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பாலநந்தகுமார், இத்தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார். அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த முன்னாள் எம்.பி. அர்ஜுணன், பத்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவர் பதவியை பெற, கடும் பாடுபட்டு அந்த பதவியை மாவட்ட செயலாளர் மூலம் தற்போது பெற்றுள்ளார். இவரும், இத்தொகுதிக்கு காய் நகர்த்தி வருகிறார். இதற்கிடையில், புதிதாக பதவியேற்ற நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத், இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, யாரை சிபாரிசு செய்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளார். ஒருமித்த கருத்து நிலவாமல், இத்தொகுதியில் அ.தி.மு.க.வினர் மல்லுக்கட்டி வருவது, அ.தி.மு.க. தொண்டர்களிடையே மனக்கசப்பை உருவாக்கி வருகிறது. இந்த முட்டல், மோதல் என்று தீருமோ..? என புலம்புகின்றனர்.

அ.தி.மு.க.வில், சமீபத்தில் உள்கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பல பேருக்கு பல வகையான மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இத்தொகுதியில் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்றாக செயல்படும் இளைஞர்கள் தனி கோஷ்டியாக செயல்பட துவங்கியுள்ளனர். இதை மாவட்ட செயலாளர் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இப்படி அவரவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் இத்தொகுதியில் உள்கட்சி புகைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும், ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்பது முடியாத காரியமாக இருக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

Related Stories:

>