அரியலூர் தொகுதியில் யாருக்கு சீட்டு? சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக களம் இறங்கும் மாஜிக்கள்: கூட்டணி கட்சியும் நெருக்கடியால் அதிமுக கலக்கம்

அரியலூர்: அரியலூர் தொகுதியில் யாருக்கு சீட்டு என பரவலாக போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக மாஜி எம்பி, எம்எல்ஏவும் களம் இறங்குகின்றனர். இதுதவிர கூட்டணி கட்சியும் நெருக்கடியால் சிட்டிங் எம்எல்ஏவுக்கு சிக்கல் நிலவுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் என 2 சட்டமன்ற தொகுதிகள் பொது தொகுதிகளாக உள்ளது. அரியலூர், திருமானூர் மற்றும் தா.பழூர் மேற்கு ஒன்றிய பகுதிகள் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. 1952 முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில், காங்கிரஸ் 1952, 1957, 1967, 2006, என 4 முறையும், திமுக 1962, 1921, 1977, 1980, 1989 என 5 முறையும், அதிமுக 1984, 1991, 2001, 2011, 2016 என 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1996 ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 6 முறை அதிமுகவும், திமுகவும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு கட்சிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

2001 க்கு பின் இரு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், திமுக மாவட்ட செயலாளர் எஸ்எஸ்.சிவசங்கர் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்எஸ்.சிவசங்கரை விட 88,523 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 2043 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை சிவசங்கர் இழந்தார். இந்நிலையில் வரும் 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக, திமுக இடையே நேருக்குநேர் போட்டி ஏற்படுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவரது உறவினருக்கு அரியலூர் தொகுதியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதால் சிட்டிங் எம்எல்ஏ தாமரை ராஜேந்திரன் மட்டுமல்லாமல் அதிமுகவினரும் பீதியில் உள்ளனர்.

சிட்டிங் எம்எல்ஏவிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதால் அரியலூர் தொகுதியில் மீண்டும் எம்எல்ஏ தாமரை ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்குள்ளே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர முன்னாள் ராஜ்யசபா எம்பி இளவரசன், அரியலூர் முன்னாள் எம்எல்ஏ இளவழகன், வழக்கறிஞர் சாந்தியும் வரும் தேர்தலில் எப்படியாவது சீட்டு வாங்கி போட்டியிட வேண்டும் என இப்போதில் இருந்தே தயாராகி வருகின்றார்களாம்.

கிடப்பில் கிடக்கும் திட்டம்

அரியலூர் சிட்டிங் எம்எல்ஏ தாமரை ராஜேந்திரன் கடந்த 5 வருடத்தில் அரியலூரில் மருத்துவ கல்லூரி, ரயில் நிலையம் அருகே மேம்பாலம், மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, பெரம்பலூர் மானாமதுரை சாலையில் உள்ள மரத்தடியில் கூடுதல் உயர்மட்ட மேம்பாலம், அரியலூர் நகரில் அள்ளப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி செய்யும் திட்டம், சுத்தமல்லி நீர்த்தேக்கம் மற்றும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் என பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளார்.

இருந்தாலும் அரியலூர் தொகுதியில் பெரும்பகுதி நிலம் சிமென்ட் ஆலைகளும், மானாவாரி சாகுபடி நிலங்களாகவும் உள்ளது. அரியலூரில் சாலை, ரயில் போக்குவரத்து வசதி உள்ளதால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஜெயலலிதாவால் புதுவாழ்வு திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு தற்போது கிடப்பில் உள்ளது. வசதியற்றவர் ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுநர் பயிற்சி, குடிசை தொழில் பயிற்சி, சிறு, குறு கடன் என பல திட்டங்களில் இலவசமாக பயிற்சி பெற்று வந்தனர். இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்ட வசதியற்ற மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories:

>