இடவசதியில்லாததால் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: டெல்டா விவசாயிகள் குற்றச்சாட்டு

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் போதிய இடவசதியின்றி அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இலக்கை தாண்டி 3.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பருவம் தவறி பெய்த கனமழையால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியது. மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காயவைத்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.இந்நிலையில், மழையிலும் இயற்கை இடர்பாடுகளிலும் இருந்து காப்பாற்றிய நெல்லை, அறுவடை செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்குக்கு எடுத்து செல்ல லாரி வசதி செய்யப்படுவதில்லை. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் பிடித்தம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து வருகிறது. இதனால் இரண்டு ஒன்றியங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்க போதிய இட வசதியின்றி தவிக்கின்றனர்.

அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைப்பதற்கும் இடமில்லாமல் சாலையோரங்களில் கொட்டி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிடித்தம் செய்த நெல் மூட்டைகள் 20 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளதால், எடை பிடித்த மூட்டைகள் எடை குறைந்து, அதற்கான தொகையை கொள்முதல் நிலைய பணியாளர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பிடித்தம் செய்யப்படுமோ என அஞ்சுகின்றனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: