10 ஆண்டாக தொகுதிக்காக அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத எம்எல்ஏ -மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர்

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மண்ணச்சநல்லுார், முசிறி, திருவெறும்பூர், லால்குடி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி மாவட்டம். மருங்காபுரி சட்டமன்ற தொகுதி  2016ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக மாறியது. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் உள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது இவரை எதிர்த்து  திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியை சேர்ந்த முகமது நிஜாம் போட்டியிட்டார்.  வறட்சி பகுதியான மணப்பாறை தொகுதியில் விவசாயத்தை சார்ந்த கூலித் தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். போதிய மழை இன்றி விவசாயத்தை கைவிட்டு திருப்பூர், கோவை என வேலை தேடி சென்று விட்டனர். தொகுதியில்  தொழிற்சாலைகள் இல்லாததால் திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

மணப்பாறை தொகுதியில் இரண்டு முறை அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர்  எம்.எல்.ஏ.வாக இருந்தும் தொகுதியில் அரசு சார்பில் ஒரு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர முடியவில்லை. தேர்தல் வாக்குறுதியாக பூக்கள் நிறைய விளையக்கூடிய இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை நிறுவப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுதவிர ெதாகுதியில் தினசரி குடிநீருக்காக ஏதாவது ஒரு பகுதியில்  காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அடிப்படை பிரச்சனைகள் எதுவும் இதுவரை தீர்க்கவில்லை என்பது தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.

‘10 ஆண்டுகளாக எந்த திட்டமும்  செயல்படுத்தப்படவில்லை’

மணப்பாறை ஒன்றியக் குழு தலைவர் திமுகவை சேர்ந்த அமிர்தவள்ளி கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளாக பொன்னணியாறு அணையில்  போதிய நீர் இன்றி அணை திறக்கப்படவில்லை. இதனால் அணையை நம்பி இருந்த  விவசாயிகளின்  வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாய நிலம் இருந்தும்  திருப்பூர், கோவை என விவசாயிகள் வெளியில் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகள் சிட்டிங் எம்.எல்.ஏ. வாக இருக்கும்  சந்திரசேகர்,  பொன்னணியாறு அணைக்கு நீரை கொண்டு வர எந்த முயற்சியும்  எடுக்கவில்லை. இந்த தொகுதியில் முக்கிய திட்டங்கள் எதுவும்  செயல்படுத்தவில்லை’ என்றார்.

‘கிராமங்கள் தோறும் சாலைகள்’

எம்எல்ஏ சந்திரசேகர் கூறும்போது, ‘மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி கிராமங்கள்தோறும் சாலைகள், குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர மழைக்காலங்களில் நிலவும் பிரச்னைகளை  போக்க வேம்பனூர், அடைக்கம்பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் பூசாரிப்பட்டி, கள்ளக்காம்பட்டி ஆகிய இரண்டு பள்ளிகள் தவிர அனைத்து உயர்நிலை பள்ளிகளும்  மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், அம்மா மினி கிளினிக்குகளும் திறக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories: