திருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை

ஆவடி: திருநின்றவூரில் இருந்து பெரியபாளையத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை வழியாக நத்தமேடு, நடுகுத்தகை, பாக்கம், மேல்கொண்டயார், வெங்கல், தாமரைப்பாக்கம், புலியூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும்  நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, பெரியபாளையம் அம்மன் கோயிலுக்கு ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பாதாகை, பட்டாபிராம், வேப்பம்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த  சாலை வழியாக தான் பயணிக்கின்றனர். இச்சாலை திருநின்றவூர் மேம்பாலத்தின் முடிவில் ரவுண்டானா உள்ளது. இதில், மையப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 8 மின் விளக்குகளின் வெளிச்சத்தில்  வாகன ஓட்டிகள் எளிதாக சென்றுவந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் ரவுண்டானாவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு  சென்று வருகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் போதுமான வெளிச்சமின்றி சென்று வருகின்றனர். அப்போது, அவர்கள் எதிரே வரும் கனரக வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், இச்சாலையில் செல்லும்  பாதசாரிகளும் இரவு நேரங்களில் இருளில் நடமாட முடியவில்லை. மேலும், இருளை பயன்படுத்தி சமூகவிரோதிகள் பெண்களிடம் செயின் பறிப்பு, சில்மிஷம் உள்ளிட்ட  குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சாலையில்  ஏராளமான வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து இரவில் வீட்டுக்கு திரும்ப முடியாமல் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை திருநின்றவூர் பேரூராட்சி  அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் ரவுண்டானாவில் உள்ள  உயர்கோபுர மின் விளக்கை உடனடியாக சீரமைக்க  வேண்டும்” என்றனர்.

Related Stories: