‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வேலை இல்லாமல் 10 ஆண்டுகளாக அவதிப்படுகிறோம்: மு.க.ஸ்டாலினிடம் வேதனையுடன் கூறிய இளைஞர்கள்

திருப்போரூர்: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, அந்தந்த பகுதி  பிரச்னைகளை, பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் மனுக்களாக கொடுக்கின்றனர். இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 5ஆம் கட்ட பிரசார பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் படப்பை கரசங்காலில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்  மேற்கொண்டார். கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செல்வம் எம்பி, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, வரலட்சுமி  மதுசூதனன், இதயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் பேசியதாவது.

சத்யா,  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி: எங்கள் பகுதியில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மழைநீர் கால்வாய், குப்பைகள் அகற்றுதல் என எந்த பணியும் முறையாக நடக்கவில்லை. அடுத்த முதல்வராக பொறுப்பேற்கும் நீங்கள்தான் எங்கள்  பிரச்னைகளை தீர்க்க வேண்டும். சைமன்ராஜ், ஆலந்தூர் தொகுதி : இளைஞர்களாகிய நாங்கள் வேலைவாய்ப்பு இல்லாமல்  10 ஆண்டுகளாக அவதிப்படுகிறோம். நேர்முகத் தேர்வுக்கு சென்று வந்தாலும் எந்தப் பயனும் இல்லை. வேலைக்கு எப்படி ஆட்களை எடுக்கிறார்கள் என  தெரியவில்லை. நீங்கள்தான் எங்களின் கடைசி நம்பிக்கை. நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இளைஞர்களின் வேலைவாயப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அஜினா (திருநங்கை), தாம்பரம் தொகுதி: திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். எங்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுக்கிறார்கள். எனவே, நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சமூகத்தில் எங்களுக்கு நல்ல நிலையை  உருவாக்கித் தர வேண்டும்.

மேரி, செங்கல்பட்டு தொகுதி: செங்கல்பட்டு, மகாலட்சுமி நகரை சேர்ந்த நாங்கள் ஒவ்வொரு மழையின்போதும் தத்தளிக்கிறோம். எங்கள் பகுதியில் 4 ஏரி தண்ணீர் ஒன்றாய் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மழையின்போதும் ஊடகங்களில்  மகாலட்சுமி நகர் தத்தளிப்பதை பார்க்கலாம். இந்த மழைநீர் வடிய சுமார் 1 மாதம் ஆகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 2 ஆண்டு காலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படாமல் உள்ளது. அதையும்  சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷாஜகான், செங்கல்பட்டு தொகுதி : ஜிஎஸ்டி சாலையில்  கட்டப்படும் ஒரகடம் ரயில்வே மேம்பாலப் பணிகள் 8 ஆண்டுகளாக முடியாமல் உள்ளது. இதனால் வேலைக்கு செல்ல சிரமமாக உள்ளது. 108 ஆம்புலன்ஸ் போவதற்கும் வழியில்லை.  இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்து இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். சாமுண்டீஸ்வரி, பல்லாவரம் : எங்கள் பகுதியில் 2 ஆயிரம் குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளாக வசிக்கிறோம். ராணுவப் பகுதியை ஒட்டியுள்ளதால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம்  முறையிட்டால், ராணுவப் பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி செய்ய முடியாது என்றனர். எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சுமி கருப்பையா : கடந்த 20 வருடங்களாக நான் கணவரை இழந்து தவித்து வருகிறேன். பென்சனுக்கு அரசு அலுவலகத்திற்கு இன்றும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். மாவட்ட கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளிடம் மனு  கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 100 நாட்களில் நீங்கள் என்னுடையை கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் என்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பதிலளித்து பேசியதாவது: உங்களது கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் முதல்வர் பழனிசாமி நலத்திட்டங்களை அறிவிக்கிறார். 4 மணிக்கு சட்டமன்றத்தில் அறிவிக்கிறார். 4.30 மணிக்கு தேர்தல்  தேதி அறிவிக்கப்படுகிறது. ஆனால் முதல்வர் அறிவித்த எந்த திட்டத்துக்கும் அரசாணை பிறப்பிக்க முடியாது.

ராமதாஸ் சொல்லி நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்புதான். நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக வலியுறுத்தி  வருகிறது. ஆனால் அப்போது மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் ஏமாற்றுகிறார் என தெரிவித்தனர். ஆனால் இவர்கள் அல்வாவே கொடுத்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நடத்தி முடிக்கப்படும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுகவினர் மட்டுமே பேசுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறார்.  சைமன் ராஜ் போன்றவர்கள் அதிமுகவினர்தான். ஆனால், அவர் வெளிப்படையாக நடுநிலைமையோடு பேசுகிறார். இதெல்லாம் செல்லூர் ராஜூக்கு தெரியுமா.

சமூகத்தில் ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்றும், 3ம் பாலினத்தவரை திருநங்கைகள் என்றும் திமுக தலைவர் கலைஞர் பெயர் சூட்டினார். எனவே, அவர்களை நல்லமுறையில் நடத்த வேண்டும். குடிமராமத்து பணியில்  முதலமைச்சர் பழனிசாமி சென்னைக்கு அருகில் உள்ள ஏரிகளைக்கூட தூர்வாரவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் அரசு கஜானாவைத்தான் தூர்வாரியிருக்கிறார் இவ்வாறு அவர் பேசினார். காட்டாங் கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் தண்டபாணி, ஆராமுதன், எம்.கே.டி.கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட துணை அமைப்பாளர்கள் குன்னம் முருகன், ஜார்ஜ், ரவி, சந்தவேலூர் சத்யா, இளைஞரணி  அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: