தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பரிசு பொருட்கள் விநியோகம்: ரொக்கம், வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் என கோடிக்கணக்கில் பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் அதிமுகவினர் வீடு, வீடாக பரிசுப்பொருட்கள், ெராக்கப்பணம் விநியோகத்தை தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் புகாரையடுத்து,  ரொக்கம், வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. இதையடுத்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தமிழகத்தில்  அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர்களின் வாகனங்கள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைவர்கள் சிலைகள்  மூடப்பட்டு, கட்சி சின்னங்களை அழிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், அரசியல் கட்சிகள், வாக்காளர்களான பொதுமக்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கக்கூடாது என்பது மிக முக்கிய விதிமுறையாக  உள்ளது. இதன்படி, பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் சோதனையிட்டு பரிசு பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை  அடுத்துள்ள பாறைமேடு குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும் சில வீடுகளிலும் அ.தி.மு.க.வினர் பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதாக நேற்று  மாலை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு திமுகவினர் தகவல் கொடுத்தனர். ஆனால், மீட்டிங்கில் இருப்பதால் சற்று நேரம் கழித்து வருகிறோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, தி.மு.க.வினர் அப்பகுதியில் தர்ணா  போராட்டம் நடத்தினர். இதன்பிறகே, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதிகாரிகள் சோதனையில் தங்கும் விடுதி ஒன்றிலும், 2 வீடுகளிலும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, வால்பாறை தாசில்தாரும், பறக்கும் படை தலைவருமான ராஜா தலைமையிலான அதிகாரிகள் வீடுகளில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த எவர்சில்வர் தட்டு, வேஷ்டி, சேலை, உள்ளிட்ட பல பொருட்களை  பறிமுதல் செய்தனர். இந்த பரிசி பொருட்கள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோரது உருவபடம்  அச்சிடப்பட்ட பையில் தனித்தனியே போட்டு வைக்கப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். இதன்பின்னர், 2 வீடுகள், ஒரு தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு  போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவற்றை, வால்பாறை தாலுகா முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்க, பட்டியல் போட்டு தயாராக வைத்திருந்தனர்.  ஓ.பி.எஸ் தொகுதியில் பணம் பட்டுவாடா: ஓட்டுக்காக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியில் கிராமங்கள் மற்றும் போடி நகரில் உள்ள 33 வார்டுகளில், நேற்று முன்தினம் ஓபிஎஸ்சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்  தலைமையில், அதிமுகவினர் வீடு, வீடாகச் சென்று, ரேஷன் கார்டுகளின் ஜெராக்ஸ் காப்பிகளை வாங்கி வைத்துக் கொண்டு, ரூ.2 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை ஆட்டோக்கள்,  மினிடெம்போக்களில் வைத்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் புகார் கூறியதோடு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நள்ளிரவில் வீடு வீடாக விநியோகம்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வீடுகளை தட்டி, ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம், வேட்டி, சேலை, ஜாக்கெட் பிட் ஆகியவற்றை அதிமுகவினர் வழங்கினர்.  தேர்தல் அறிவிப்புக்கு முன் போடி தொகுதியில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர். போடி தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 3 தவணைகளாக ரூ.5 ஆயிரம் வழங்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு இருப்பதாக  கூறப்படுகிறது.  நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, நெல்லியாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேற்று மினி லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அ.தி.மு.க தலைவர்கள் படத்துடன் சேலை, வேட்டி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர் பொறித்த சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் பைகளில் நிரப்பி வாக்காளர்களுக்கு  வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க.வினர் வாகனங்களில் ஏற்றிச்சென்று வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தேர்தல் தேதி அறிவித்த உடன் அ.தி.மு.க.வினர் தேர்தல் விதிகளை பின்பற்றாமல் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வாகனங்களில்  பரிசு பொருட்களை ஏற்றி வந்தது பந்தலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி அணை பகுதியில் அ.தி.மு.க.வினர் கிராம மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லாரி நிறைய பரிசு பொருட்களுடன் வந்தனர். பின்னர் அவற்றை சிறிய சரக்கு லாரிகளுக்கு மாற்றினர். அப்போது  அவர்களை புகைப்படம் எடுத்தவுடன் அ.தி.மு.க.வினர் லாரியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பகலில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, கும்மிடிபூண்டியில் இருந்து தஞ்சைக்கு சென்ற 2 லாரிகளை  நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு லாரியில் இருந்தவர்கள் வெறும் பெட்டி என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.  மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில், குக்கர்கள் பெட்டி பெட்டியாக இருந்தது. அதில், தஞ்சை மாவட்ட அமமுகவினர், ஜெயலலிதா பிறந்த நாள் விழா என ஜெயலலிதா மற்றும் டி.டி.வி. தினகரன் படம் போட்டு கழக  வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டி இருந்தது.

இதையடுத்து, பறக்கும் படையினர் துணை தாசில்தார் சரவணன் தலைமையில், எதிர்மானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு  முன்னால் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட உத்தரவிட்டனர். அதன்படி, அங்கிருந்த போலீசார், அந்த லாரியை மடக்கி குக்கர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 2 லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு  கொண்டு சென்றனர். அங்கு சோதனையிட்டதில், 330 பெட்டியில் 12 லட்சம் மதிப்பிலான 3 லிட்டர் குக்கர்கள் இருந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருங்கப்பாக்கம் அய்யாசாமி தெருவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, டோக்கன்கள்  வழங்கப்பட்டது.

இதையறிந்த வருவாய்துறை அதிகாரிகள், அதிமுகவினரிடம், தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது என தெரிவித்தனர். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என  தெரிவித்தர்ர். இதன்பின், அதிகாரிகள் அங்கிருந்து சென்றவுடன், டோக்கன் கொடுத்த பொதுமக்களை வரவழைத்து வீட்டிலேயே தலைக்கவசம், அயன் பாக்ஸ், ஹாட்பாக்ஸ், புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். தேர்தல் விதிகளை  அதிமுகவினர் மீறியது தெரிந்தும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யாமல் சென்றது பொதுமக்களிடையே சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தமிழத்தில், தேர்தல் தேதி அறிவித்த ஒரே நாளில் கோடிக்கணக்கான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் தொகுதியில் சேலை, ஜாக்கெட் பிட்டு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் இடம் பெற்றுள்ள ஜலகண்டாபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்ற அதிமுகவினர், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி படம் ஒட்டிய கவரில் சேலையை வைத்து கொடுத்துள்ளனர். அந்த கவரின் மீது ‘மீண்டும் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர்’ என்று எழுதப்பட்டு கட்சி சின்னமும் பெரிதாக வரையப்பட்டுள்ளது. அதோடு ஜாக்கெட் பிட்டுடன் கூடிய சேலை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நள்ளிரவில் பூட்டிய  வீடுகளுக்கு உள்ளே, ஜன்னல் வழியாகவும் இந்த சேலைகளை வீசி சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை பற்றி அதிமுகவினருக்கு எந்த கவலையும் இல்லை. முதல் நாளிலேயே சேலை விநியோகத்தை தொடங்கி விட்டனர். அடுத்து பணப்பட்டுவாடா  போன்றவற்றுக்கும் தயாராகி விட்டனர். எனவே தேர்தல் அதிகாரிகள், முதல்வரின் இடைப்பாடி தொகுதியை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், நேர்மையான தேர்தல் நடக்கும்,’’ என்றனர்.

Related Stories: