சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: பொம்மை தயாரிப்பாளர்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். டெல்லியில் `இந்திய பொம்மை கண்காட்சி 2021’ஐ தொடங்கி வைத்து பிரதமர் பேசியதாவது:

உலக பொம்மை சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. நம் நாட்டில் விற்கப்படும் 85 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டவை. உள்நாட்டு கைவினை தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். தற்காலத்தில்,  மாறிவரும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, பாரம்பரியமிக்க பொம்மைகளை புதிய எண்ணங்களுடன் தயாரிக்க வேண்டும். அவற்றில் குறைந்த பிளாஸ்டிக், அதிக அளவிலான சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்த  வேண்டும்.

உள்நாட்டு பொம்மை தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 15 அமைச்சகங்களின் தலைமையில் தேசிய பொம்மை தயாரிப்பு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொம்மை தயாரிப்பில் தற்சார்பு திட்டத்தை அடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உலக சந்தையில், உள்நாட்டு பொம்மை உற்பத்தியை அதிகரிக்கசெய்ய முடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

மோடிக்கு சுற்றுச் சூழல் விருது

சர்வதேச எரிசக்தி மாநாடு நாளை தொடங்கி, மார்ச் 5ம் தேதி வரை காணொலி மூலம் நடைபெறுகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, செராவீக் உலக எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் விருது வழங்கப்பட உள்ளது.  இந்தியாவை நிலையான வளர்ச்சியை நோக்கி வழிநடத்தி செல்லும் அர்ப்பணிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக, ஐஎச்எஸ் மார்க்கிட் துணைத் தலைவரும் மாநாட்டின் தலைவருமான டேனியல் எர்ஜின் தெரிவித்துள்ளார்.  இம்மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற இருக்கிறார்.

Related Stories: