பேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா? வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி

* இந்திய அரசியலமைப்பு சாசனம்.

* மூன்றாவது அட்டவணை.

* சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை...

* இந்திய குடிமக்களுக்கு 6 அடிப்படை உரிமைகளை வழங்கும் சிறப்பு பிரிவுகள்.

* சம உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமையை அளிக்கும் சுதந்திர உரிமை, சுரண்டலை எதிர்க்கும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை, கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை, அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை.

* இந்த 6 அடிப்படை உரிமைகள், இந்தியர்கள் ஒவ்வொருக்கும் உரித்தானவை.

* ஜாதி, மதம், பாலினம், மொழி வேறுபாடுகள் இன்றி  இந்தியர்கள் அனைவரும் இந்த உரிமைகளை அனுபவிக்க கடமைப்பட்டவர்கள்.

* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என இந்தியா மார்தட்டிக் கொள்வதற்கு, முத்தாய்ப்பாக இருப்பவை இந்த அடிப்படை உரிமைகள்தான்.

* அதனால்தான், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ‘மகா சாசனம்’ என்று பெருமையுடன் இவை உச்சி முகரப்படுகின்றன.

* பாரபட்ச அதிகார வர்க்கம், ஆட்சியாளர்களால் இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது, அவற்றை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டிய கடமையையும், அதிகாரத்தையும் நீதிமன்றங்கள் பெற்றுள்ளன.

திஷா ரவி. இந்த 22 வயது இளம் பெண்ணுக்கு இன்று, ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட இந்த அடிப்படை கருத்துரிமையும், பேச்சுரிமையும் நீதிமன்றத்தின் மூலம்தான் நிலை நாட்டப்பட்டு இருக்கிறது.  பெங்களூருவின் ஒரு மூலையில் வாழ்ந்து, நானும் ஒரு ‘சூற்றுச்சூழல் ஆர்வலர்’ என்ற பெருமையுடன் சாலைகளில் மரம் செடிகளை நட்டு, ஏரி, குளங்களில் குப்பைகளை அகற்றி வந்தவர் தான் திஷா ரவி. ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற சிறிய  அமைப்பின் வட்டத்துக்குள் இருந்து கொண்டு, தன் வயதுடைய இளைஞர், இளைஞிகளுடன் பருவநிலை மாற்ற பாதிப்புக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருந்தவர். பிபிஏ பட்டதாரி. கடந்த பத்தே நாட்களில்  உலகளவில் பிரபலமாகி  இருக்கிறார். கனடாவில் தொடங்கிய ஒரு ‘டூல்கிட்’ சர்ச்சை, இவரை சிறையில் தள்ளி இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்... நமக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை இருக்கிறது என்பதை நம்பி, கருத்து வெளியிட்டதால் தண்டிக்கப்பட்டு   இருக்கிறார்.  இவர் செய்த குற்றம்தான் என்ன?

 மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் வெயில், குளிர்,  பனி என்ற பருவ நிலைகளை வென்று, குடும்பங்களை துறந்து 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.   இவர்கள் மீது  சர்வதேச அளவிலான மக்கள் கூட கரிசனம் காட்டி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு அந்த உணர்வு இருக்காதா? அப்படிப்பட்ட உணர்வு மேலோங்கி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிறு  பறவையாக சிறகடித்து புறப்பட்டவர்தான் திஷா ரவி. இவருக்கு தூண்டுகோலாக இருந்தவர் கிரெட்டா தன்பர்க். ஸ்வீடன் நாட்டு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்.  இந்திய விவசாயிகளுக்காக  ஸ்வீடனில் இருந்து இவர் கொடுத்த ஆதரவு குரல், மத்திய அரசை அதிர  வைத்து விட்டது என்பதே  உண்மை. விவசாயிகள் போராட்டம், சர்வதேச கவனத்தை மேலும் ஈர்ப்பதற்க தன்பர்க் வெளியிட்ட ‘டூல்கிட்’, மிகப்பெரிய ஆயுதமாக  மாறியது.  

* வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் எப்படிப்பட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கலாம்.

* எப்படிப்பட்ட கேள்விகளால் மத்திய அரசை துளைக்கலாம்.

* விவசாயிகளுக்கு உலக மக்கள்  ஏன் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கான காரணங்கள் என்ன?

* விவசாயிகள் என்ன செய்தால், போராட்டம் வெற்றி அடையும்.

* போராட்டங்களை எப்படி எல்லாம் முன்னெடுக்கலாம்.

இது போன்ற பல யோசனைகளையும்,  கருத்துகளையும், மக்களை போராட்ட களத்துக்கு அழைக்கும் வாசகங்களும் இந்த ‘டூல்கிட்’டில் இடம் பெற்றன.  கிரெட்டா தன்பர்க் வெளியிட்ட இந்த டூல்கிட்டில் தனது கருத்தை பதிவு செய்ததுதான் திஷா ரவி செய்த குற்றம். இது, நாட்டுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் கருத்துகளாக மாறிவிட்டது என்றது டெல்லி போலீஸ். அதற்காக அவர் மீது  தேசத் துரோக வழக்கு பாய்ந்தது. கடந்த 13ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த  சிறப்பு போலீஸ் படை, திஷாவை கைது செய்து அழைத்துச் சென்றது.  நாட்டின் தலைநகரில் 5 நாள் போலீஸ் காவல், 3 நாள் நீதிமன்ற காவல், நீதிமன்ற விசாரணை என பத்து நாட்கள் படாதபாடு. ஜாமீன் அளிக்க கூட கடும் எதிர்ப்பு. இறுதியாக, கடந்த 23ம் தேதி அவருக்கு ஜாமீன் அளித்தார் டெல்லி நீதிமன்ற  நீதிபதி தர்மேந்திர ரானா.

‘திஷா ரவியின் செயல்கள், தேச நலனுக்கு எதிரானவை. சமூக ஆர்வலர் சாந்தனு முலுக், மும்பை பெண் வக்கீல் நிகிதா ஜேக்கப் ஆகியோரும் இதற்கு உடந்தை. விவசாய போராட்டத்தை தூண்ட, டூல்கிட்டை உருவாக்கிய சதிகாரர்களே  இவர்கள்தான். இவர்களின் சதி திட்டத்தால்தான், டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. டெல்லியில் எப்படி வன்முறைகளை நிகழ்த்த வேண்டும். எங்கெல்லாம்  போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற விவரங்கள் டூல்கிட்டில் பகிரப்பட்டன. இவர்களின் டூல்கிட்டுக்கு, கனடா நாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘பொயட்டிக் ஜஸ்டீஸ்’ அறக்கட்டளை பின்னணியில் இருந்துள்ளது.  இந்த அமைப்பின் துணை நிறுவனர் மோ தாலிவால், இந்தியாவுக்கு எதிராக இந்த சதிகளில்  கிரெட்டா தன்பர்க், திஷா ரவி உள்ளிட்ட அனைவரையும் ஈடுபடுத்தி உள்ளார்,’

 நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் செய்த வாதமே இவைதான். ஆனால், போலீசின் இந்த வாதங்களை, ‘போதுமானதல்ல; மேலோட்டமானவை’  என்ற ஒற்றை வார்த்தையில் நிராகரித்து, திஷாவுக்கு ஜாமீன் வழங்கி விடுதலை செய்துள்ளார் நீதிபதி ரானா. அதோடு, ‘ நமது நாட்டை கட்டமைத்த நமது  முன்னோர்கள், மறுபாட்ட கருத்துகளுக்கு மரியாதை அளித்தனர். பேச்சுரிமை, கருத்துரிமைக்கு உரிய அங்கீகாரம் அளித்தனர். அதை நாம் களங்கப்படுத்தி விடக்கூடாது. அதிருப்தி கருத்துகளை கூறும் உரிமை, அரசியல் சாசன சட்டப்பிரிவு  19(1)ஏ,வில் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதற்காக, தேசத் துரோக வழக்கை ஒருவர் மீது திணிக்க முடியாது,’ என்று பேச்சுரிமையின் மகிமையை தீர்ப்பில் புகழ்ந்துள்ளார் நீதிபதி ரானா.

‘அரசை குறை கூறி பேசினால் குற்றம்... அதற்கு எதிராக எழுதினால் வழக்கு... இவை எல்லாம் அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை உருவாக்கி இருக்கிறது,’ என்கின்றனர் நாட்டின் மீது அக்கறை கொண்ட  ஆர்வலர்கள்.

‘திஷா வழக்கில் நீதிபதி பயன்படுத்திய வார்த்தை பிரயோகம், அடிப்படை உரிமையை ஆணித்தரமாக எடுத்துக் காட்டிய மாண்பு, டெல்லி போலீசுக்கு மட்டுமின்றி, அதற்கு தூண்டுகோலாக இருந்த ஆட்சியாளர்களுக்கும்  தர்மசங்கடத்தை  அளித்துள்ளது என்பது நிதர்சனம்,’ என்று பெருமிதப்பட்டுள்ளனர் சட்ட நிபுணர்கள்.

சட்டப்பிரிவு 19 (1)ஏ

இந்திய அரசிலமைப்பு சட்டப் பிரிவு 19 (1) ஏ - இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமையை அளிக்கும் சட்டம் இதுதான். தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடாக தெரியும் எதைப் பற்றியும், வாய் மூலமாகவோ, எழுத்து  மூலமாகவோ, அச்சுகள் மூலமாகவோ, படங்களின் மூலமாகவோ அல்லது இதர முறைகளின் மூலமாகவோ அச்சமின்றி வெளிப்படையாக மக்கள் கூறலாம் என்கிறது இந்த பிரிவு.

தாமஸ் ரிமெரின் வார்த்தை

‘பொயட்டிக் ஜஸ்டிஸ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் உருவாக்கியவர் எழுத்தாளர் தாமஸ் ரிமெர். ‘கடைசி கால துயரங்கள்’ (1677) என்ற தனது கதையில் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். மனிதன் தான் செய்யும்  ஒவ்வொரு தவறான செயலுக்கும், நடவடிக்கைகளுக்கும் அதற்குரிய தண்டனையை பெறுகிறான் என்பதே இதன் அர்த்தம்.

கடந்தாண்டில் பிறந்த ‘பொயட்டிக் ஜஸ்டிஸ்’

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஊடுருவல் இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், திஷா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் அறக்கட்டளை’, கனடாவில் 2020,  மார்ச்சில் தான் தொடங்கப்பட்டது.  இது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனப்படும் மோ தாலிவால், அனிதா லால் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவை ஏன் என்று கேளுங்கள்’ என்பதே இந்த அமைப்பின் முழக்கமாக இருக்கிறது.  தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் இது உலகளவில் பிரபலமாகி இருக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல...

1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஐநா.வில் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்த திருமுருகன் காந்தி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2. கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட காஷ்மீரை சேர்ந்த  அமீர், பாசித், தலிப் ஆகியோர் தேசத் துரோக  வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

3. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டில்லி ஷாகின்பாக்கில் நடந்த போராட்டத்தில் பேசிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

4 பெங்களூருவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட, அமுல்யா என்ற பெண் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா அரிது பிரிட்டனில் ஒழிப்பு

* அமெரிக்காவில் கூட தேச துரோகச் சட்டம் அமலில் உள்ளது. ஆனால், அந்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், இச்சட்டம் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

* n பிரிட்டனில் கூட தேசத் துரோக சட்டம் அமலில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், 2009ம் ரத்து செய்யப்பட்டது.

28 சதவீதம் அதிகரிப்பு

* இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் தேசத் துரோக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ‘ஆர்டிகல்- 14’ என்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கொண்ட  குழு கூறுகிறது.

* என்சிஆர்பி என அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், கடந்த 2014ம் ஆண்டில் இருந்துதான் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. ஆனால், என்சிஆர்பி  கூறும் வழக்குகளின் எண்ணிக்கை, ஆர்டிகல்-14 குழு கூறும் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருக்கிறது.

அம்பேத்கரை கவர்ந்தவை

* 6  அடிப்படை உரிமைகளையும், ‘ஜனநாயகத்தின் இதயம்’ என உச்சி முகர்ந்துள்ளார் அரசியல் சாசனத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர்.

* இந்த  அடிப்படை உரிமைகளை  நெருக்கடி கால அறிவிப்பின் மூலமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரம்  ஜனாதிபதி ஒருவருக்கு மட்டுமே உண்டு.

Related Stories:

>