ஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்

சென்னை: சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட   உரிமையாளர்களும்  தொழில் செய்து வருகிறோம். நாங்கள் பலகோடி இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே, ‘ஆட்டோ  தொழிலாளர்களுக்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கித்தர வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பொருளாதார சூழலுக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை வரையறை செய்து முதல்வரின் நேரடி பார்வையில்  இயங்க வேண்டும். கால்டாக்ஸிகளுக்கு தனி பர்மிட், தனி வண்ணம் அளித்து அடையாளப்படுத்த வேண்டும். வாடகை கட்டணம் கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். ஐடி நிறுவனங்களில் இயக்கப்படும் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு  தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் இஎஸ்ஐ, பிஎப், ஆண்டு ஊதிய உயர்வு, விடுமுறை மற்றும் பணி நேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக முக்கிய நகரங்களில் கான்கிரீட் தளம் அமைத்து ஓட்டுநர்களுக்கு ஓய்வு  அறை மற்றும் கழிவறை அமைத்திட வேண்டும். அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர்களுக்கு நேரடியாக அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். விபத்துகளில் சிக்கும் ஓட்டுனர்களுக்கு 50,000 உதவி தொகையும் இயற்கை மற்றும்  விபத்தில் இறப்போர்   தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் நிவாரணம் வழங்கிட வேண்டும்.   தமிழக வாடகை வாகனங்களுக்கு என பிரத்தியேக செயலி மற்றும் தொலைபேசி அழைப்பு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  மேலும் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12கோடி வருவாய் ஈட்டமுடியும். 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை  கிடைக்கும். முதல்வர் காப்பீட்டு திட்டத்திற்கு இணையாக சிறப்பு காப்பீடு திட்டத்தை வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை வரும் சட்டமன்ற தேர்தல் 2021ல் தேர்தலுக்கான வாக்குறுதியாக  அரசியல் கட்சிகள் அளிப்பதோடு, அவர்களது அரசு நிறுவும் பட்சத்தில் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் ஒவ்வொரு சங்கத்தினரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மற்றொருபுறம் அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட வாக்குகளை கவருவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: