துணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை (பட்ஜெட்) வெளியிட்டு பேசியதாவது: 2020-21ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இந்த மாமன்றத்தின் முன்வைக்கிறேன். கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசர தேவைகளின் காரணமாக, அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் சார்ந்த இனங்கள்  இறுதி துணை மதிப்பீடுகளில் உள்ளடங்கும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்ததால், வழக்கமாக சில முக்கிய செலவினங்களின் இனங்களை குறிப்பிடுவது, தற்போது உகந்ததாக இருக்காது. கூடுதல்  செலவினங்களை சார்ந்த விவரங்களை இறுதி துணை மதிப்பீட்டு புத்தகத்தில் உள்ளன.

கூடுதல் செலவினங்களின் அனைத்து இனங்களுக்கும், அரசு ஆணைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன அல்லது அவை செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான் என்று இந்த மன்றத்தின் உறுப்பினர்களுக்கு  உறுதியளிக்க விரும்புகிறேன்.  இறுதி துணை மதிப்பீடுகளில் எந்தவொரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக, 102 கோடியே 93 லட்சம் தேவைப்படுகிறது. அதில், பொதுத்துறையின் கீழ், 102 கோடியே 38 லட்சம் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். இறுதி துணை மதிப்பீடுகள், மொத்தம் 21,172 கோடியே 82 லட்சம்  நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இவற்றில், ரூ.17,790 கோடியே 85 லட்சம் வருவாய் கணக்கிலும், ரூ.3,381 கோடியே 97 லட்சம் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: