காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து உபரிநீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் காவிரி-சரபங்கா நீரேற்று திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 565 கோடி  செலவில் குழாய்கள் மூலம் சுமார் 100 ஏரிகளுக்கு நீர்நிரப்பும் திட்டம் இது. விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள நீர்வழிப்பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில், தமிழக முதல்வர் அவசர கதியில் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். இது சேலம் மாவட்ட மக்களை ஏமாற்றும் செயல் என்பதில் சந்தேகமில்லை. 120 கிலோ மீட்டர் நிறைவேற்ற வேண்டிய  பணிகளில் பத்து கிலோ மீட்டருக்குக் கூட பணிகள் நிறைவடையவில்லை.

மற்றொன்று, மேட்டூர் அணையில் 120 அடி நீர் தேங்கிய பிறகு அதற்கு மேல் வரும் உபரிநீரை பயன்படுத்தும் வகையில் தான் திட்டத்தின் நோக்கமாக அரசு அறிவித்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிதான் உள்ளது. இந்த  நிலையில், மேட்டூர் அணைக்குள் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி இத்திட்டத்திற்கான கிணற்றுக்குள் விட்டு குழாய் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் இத்தகைய செயல் வன்மையான  கண்டனத்திற்குரியது.

இது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும். உபரி நீர் திட்டம் என்று அறிவித்து விட்டு உரிமையான நீரை எடுத்திருப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக மிக மோசமான செயலில் ஈடுபடவும்  தயங்காதவர் முதல்வர் பழனிசாமி என்பதற்கு இது உதாரணமாகும். தவறான செயலுக்கு முதலமைச்சரே முன் நின்று துணை போயிருப்பதை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும்.

இத்தகைய தவறான செயலுக்காக தமிழக முதல்வர் வருத்தம் தெரிவிப்பதுடன், காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்ச்-2ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,  மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றிய தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாரம்பரிய பாசன உரிமையைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள  வேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>