சட்டப்பேரவை கூட்டம் நிறைவு

சென்னை: தமிழகத்தின் 15வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி கூட்டப்பட்டது. அன்று 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில், 25ம் தேதி முதல்  27ம் தேதி (நேற்று) வரை இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள், முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால், பட்ஜெட் மீதான விவாதத்தில்  ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். நேற்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதில் உரையாற்றினார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர்  சபாநாயகர் தனபால் பேசியதும் மதியம் 2.06 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து 15வது சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இனி சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு  புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுடன் வருகிற மே மாதம் 16வது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.

Related Stories: