ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்யக்கூடாது: தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்யக்கூடாது என்று தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்தை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு  தலைவர் பிரபாகர், பொதுச்செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் சூழலில் பணியில் இருக்கும் அலுவலர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது அவர்களின் வேலை வாய்ப்பு கதவை தட்டி பறிப்பதாகும். எனவே அரசு பணியில் பணியில் பணிபுரியும் அலுவலர்களின்  வயதை நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும். அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வதோ அல்லது வேறு எவ்வகையிலும் அவர்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க கூடாது. தமிழக அரசில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஆணையத்தின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் 7வது ஊதிய ஆணையத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அரசு மருத்துவர்களுக்கு வழங்கியது போன்று கால வரம்புக்கு உட்பட்ட பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் உள்ளவர்கள் உரிய விசாரணையின்றி தற்காலி பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் முன்பு துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு வளம் சேர்க்கும் வகையில் இந்திய நாட்டின் முன்னோடியாக தமிழகம் திகழ தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர் சீர்திருத்த ஆணையம் அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் கொள்கைகளை கைவிட்டு மக்களுக்கு சேவை புரிய கூடிய சூழல் தொடர்ந்திட தனியார்மய கொள்கைகளை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: