தொழிலாளர் துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: 3 நாள் போராட்டத்திற்கு முடிவு

சென்னை: தொழிலாளர் நலத்துறையினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, 3 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும், 14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி முதல் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால், தமிழகம் முழுவதும் சுமார் 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. எனவே, அலுவலகம், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் நேற்று தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் துறையினர் இடையேயான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘திமுக அரசு அமைந்ததும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களின் இன்னலை மனதில் கொண்டு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும்’ என தெரிவித்திருந்தார். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இச்சூழ்நிலையில் தொழிற்சங்கத்தினர்- தொழிலாளர் நலத்துறையினரிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் முடிவு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.  

இதுகுறித்து சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறியதாவது: வேலை நிறுத்தத்தையொட்டி தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் கடந்த 25ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. ஊதிய ஒப்பந்தம் 31.8.2019ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 1.9.2019 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். 2021 பிப்ரவரி முதல் அரசு இடைக்கால நிவாரணம் 1000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 25.2.2021ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் 1.9.2019 முதல் ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு அதற்குரிய பணப்பலன்கள் வழங்கவேண்டுமென கோரினோம். அது ஒப்புக்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தவேண்டும்.

நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி எவ்வித பழிவாங்குதலும் கூடாது, வேலைநிறுத்தம் நடந்த நாட்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது, அகவிலைப்படி நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படியை பிப்ரவரி மாதம் முதல் வழங்கவேண்டும், அரசாணை 24ன் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும், பேட்டா இன்சென்டிவ் 80:20 விகித அடிப்படையில் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன்களை வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தக்கூடாது, பணிநிலைகளில் எவ்வித மாறுதல்களும் செய்யக்கூடாது என்ற எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தி தரவேண்டும்’ எனக்கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து 3 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி, அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், இடைக்கால நிவாரணமாக 1000 வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பிப்ரவரி 2021 முதல் இடைக்கால நிவாரணமாக 1000 வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கூட்டுநர், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குழு/ மேலாண் இயக்குநர் மாநகர் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளார்.

எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பிப்ரவரி 2021 முதல் இடைக்கால நிவாரணமாக 1,000 வழங்க அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த இடைக்கால நிவாரணம் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவுகளை அந்தந்த போக்குவரத்து கழகங்களே ஏற்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: