வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றதால் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதியை குறைத்து பெற்றோம்: அதிமுகவுடன் ஒப்பந்தத்திற்கு பின் அன்புமணி பேட்டி

சென்னை: ”வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றதால் சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடும் தொகுதியை குறைத்து பெற்றிருக்கிறோம் என்று அன்புமணி கூறினார். அதிமுக, பாமக தொகுதி ஒப்பந்தத்திற்கு பிறகு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாமக அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறது. நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலை பொறுத்தவரை எங்களுடைய நோக்கம், கோரிக்கை வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான். அரசாங்கம் அதை நிறைவேற்றியிருக்கிறது. வன்னியர்களுக்கு தனி இடதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு பெறப்பட்டதின் காரணத்திற்காக, தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்து பெற்று இருக்கிறோம். ஆனாலும் எங்களுடைய பலம், குறைய போவது கிடையாது. நிச்சயமாக எங்களுடைய கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் எடப்பாடி முதல்வராக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள், மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி, ”இந்த தேர்தலை பொறுத்தவரை  எங்களுக்கு முக்கியமானது பாமக நிறுவனர் ராமதாஸ்,  40 ஆண்டுகாலம் போராடி பலமுறை சிறைக்கு ெசன்று,  பல போராட்டங்கள் நடத்தி, பல தியாகங்கள் செய்து, பல அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து, இன்று ராமதாஸ் கோரிக்கை முதல்கட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகால போராட்டம். அதற்கு எங்களுக்கு முதல்கட்டமாக முடிவு வந்திருக்கிறது. அதனால், இந்த தேர்தலில் நாங்கள் எங்கள் எண்ணிக்கையை குறைத்து பெற்று இருக்கிறோம். இருந்தாலும் கூட்டணியாக நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்” என்றார்.

Related Stories: