சரக்கு, சேவை வரி அமலால் வருவாய் அதிகரிக்கவில்லை மாநிலங்களுக்கு மேலும் வரி விதிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவை கடன் 4.79 லட்சம் கோடி  எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி காலமான 2006-07ம் ஆண்டு முதல் 2010-11ம் ஆண்டு வரை, மொத்தம் கடனாக பெறப்பட்ட தொகை 44,084 கோடி மட்டுமே எனவும், தற்போது அதிமுக ஆட்சியில் கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி வாங்கப்பட்டதாகவும், இவை தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். 2020-21ம் ஆண்டில், மொத்த கடன் 4,85,502.54 கோடியாக இருக்கிறது என்றால், இந்த ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 19,43,399 லட்சம் கோடியாக உள்ளது. அதனால் தான், மொத்த கடன் அளவை மதிப்பிடும்போது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவின் விகிதாச்சாரம் எவ்வளவு இருக்கின்றது என்பதையே நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

 

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயர்ந்து கொண்டே வருவதால், கடனின் அளவு உயர்ந்தாலும், அதை திருப்பி செலுத்துவதற்கான திறனும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே, ஆண்டுக்கணக்கில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயர்ந்தது போலவே, மொத்த நிகரக் கடன் அளவும் உயர்ந்து வருவது ஒரு அசாதாரணமான நிகழ்வு அல்ல. ஒரு அரசுக்கு வாங்குகின்ற கடனை திருப்பி செலுத்துகிற திறன் இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்து, ஆராய்ந்து பார்த்துதான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஆக, மாநில அரசுக்கு வாங்குகிற கடனை திருப்பிச் செலுத்துகிற திறன் இருக்கிறது என்று நம்பிக்கை வைத்துதான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. கடனாக பெறப்படும் அந்த நிதியை எந்தவொரு ஆடம்பர செலவுகளுக்கும் பயன்படுத்துவதில்லை. மாநிலத்தினுடைய வளர்ச்சி பணிகளுக்காக மட்டுமே செலவிட்டு வந்திருக்கிறோம்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதனால், வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. வருவாய் வளர்ச்சியில் இந்த மந்த நிலையின் காரணங்களை தீர ஆராய வேண்டும். 2022-23ம் ஆண்டில் மாநிலங்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, இழப்பீட்டு தொகையை தொடர்ந்து வழங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு மேலும் வரி விதிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் போன்ற மாற்று உத்தி முறைகளை, சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்கிறேன். மாநிலங்களின் நலனை பாதுகாப்பதற்காக, இந்த முக்கியமான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: