பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: நடவடிக்கையில் இருந்து தப்பிய சிறப்பு டிஜிபி, எஸ்பி: ஆளும்கட்சி காப்பாற்றியது அம்பலம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பப்பட்ட அறிக்கையை உள்துறையில் கிடப்பில் போட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை, தனது காருக்குள் அழைத்த சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், சிறிது நேரத்தில் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் அதிகாரியை கண்டித்த பெண் அதிகாரி, காரில் இருந்து இறங்கி தனது அலுவலகம் சென்றார். பின்னர் மறுநாள் சென்னைக்கு காரில் வந்தார். வரும் வழியில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியுள்ளார். பெண் அதிகாரி காரின் சாவியைப் பிடுங்கியுள்ளார். பின்னர் சிறப்பு டிஜிபியிடம் தன்னுடைய போனில் இருந்து பேசிய பிறகு, சென்னை செல்ல அனுமதி அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஐபிஎஸ் அதிகாரிகளும், அதிகாரிகளின் சங்கமும் கடுமையாக கண்டித்தன.எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் அதிரடியாக மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ராஜேஷ்தாசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ராஜேஷ்தாஸ் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி அலுவலகத்தில் இருந்து, உள்துறைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை மாற்றும்படியும் உள்துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த தகவல் வெளியானதும் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், முன்னாள் உளவுத்துறை ஐஜிக்கு தகவல் தெரியவந்ததும், அவர் முதல்வர் அலுவலகம் மூலமாக அந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  இதனால், நேற்று அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் தேதியும் மாலையில் அறிவிக்கப்பட்டு விட்டது. இனிமேல் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்ற பின்னரே எடுக்க முடியும். எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பது தாமதமாகும். இது போலீஸ் வட்டாரத்தில் மீண்டும் புதிய பரபரப்பையும், குற்றம்சாட்டப்பட்டவர்களை அரசே காப்பாற்ற முயற்சிப்பதும் உயர் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Related Stories: