காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா: 220 பேருக்கு வழங்கப்பட்டது

சென்னை: தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 2019-20ம் ஆண்டிற்கான ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை விருது மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கினார். மேலும் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோரும் பதக்கங்களை வழங்கினர்.

போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள், ஊர்காவல் படையினர் என 220 பேர் பதக்கங்கள் பெற்றனர். மேலும் 2020ம் ஆண்டிற்கான முதல் அமைச்சரின் வீரதீர செயலுக்கான போலீஸ் பதக்கம் மற்றும் ₹5 லட்சம் வெகுமதி சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் (தெற்கு) கண்ணன், அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், திருவண்ணாமலை எஸ்.பி.அரவிந்த், சென்னை சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பி. பண்டரிநாதன், சென்னை சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. தாமோதரன், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், தீயணைப்பு வீரர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் பதக்கம், சென்னை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஜனாதிபதியின் மெச்சத்தக்க பணிக்கான போலீஸ் பதக்கம் சென்னை இணை கமிஷனர் (தலைமையிடம்) மகேஷ்வரி, வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி, சென்னை சிவில் சப்ளை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் பொதுசேவையில் சீர்மிகு பணிக்கான போலீஸ் பதக்கம் மற்றும் 25 ஆயிரம் வெகுமதி, கூடுதல் டி.ஜி.பி. (உயர் பயிற்சியகம்) டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், சேலம் மாவட்ட எஸ்.பி தீபாகனிகர் ஆகியோருக்கும், முதல்வரின் சீர்மிகு புலனாய்வுக்கான போலீஸ் பதக்கம் (2020) சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதிக்கும், தமிழக முதலமைச்சரின் சிறந்த நற்பணிக்கான போலீஸ் பதக்கம் (அண்ணா பதக்கம்),  திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தல், திருவள்ளூர் எஸ்.பி. ப.அரவிந்தன், ஈரோடு எஸ்.பி. தங்கதுரை உள்ளிட்டோருக்கும், தமிழக முதலமைச்சரின் சிறந்த நற்பணிக்கான தீயணைப்பு பணி பதக்கம் (அண்ணா பதக்கம்) சென்னை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சத்தியநாராயணனுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீசார் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கூடுதல் தீயணைப்பு துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு, சிபிசிஐடி, டி.ஜி.பி பிரதீப் வி பிலிப், சிவில் சப்ளை டிஜிபி சுனில்குமார், சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங், சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி தமிழ்செல்வன், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் உள்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: