சென்னை விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு: 26 விமானங்கள் தாமதம்

சென்னை:  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் காலை நேரங்களில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 7 மணிவரை விமானநிலைய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமானது. புதுடெல்லியில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் 107 பயணிகளுடன் சென்னை வந்த தனியார் விமானம் பனிமூட்டத்தினால் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றது. இதேபோல் பெங்களூரு, ஐதராபாத், மும்பை, ஹூப்ளி உள்ளிட்ட 6 விமானங்களின் வருகையும் தாமதமானது. மேலும், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, புவனேஸ்வர், ஹூப்ளி, மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி, ஐதராபாத், புனே, சீரடி, தோகா உள்பட 20 விமானங்களின் புறப்பாடு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

நடுவானில் பெண் பயணி பலி

வங்கதேசம் டாக்காவை சேர்ந்தவர் சலினாபேகம் (53). இதய நோயாளியான இவர், மருத்துவ சிகிச்சைக்காக, மகன், மகள் ஆகியோருடன் டாக்காவிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானத்தில் நேற்று சென்னை புறப்பட்டார். விமானம் நடுவானில் பறந்தபோது, சலினாபேகம்  நெஞ்சு வலியால் துடித்தார். இதுபற்றி விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், விமானம் நேற்று மாலை சென்னையில் தரை இறங்கியதும், மருத்துவ குழுவினர் சலினாபேகத்தை பரிசோதித்தனர். அதில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: