சண்டைக்கு அழைத்து சென்ற இடத்தில் பயங்கரம்: உரிமையாளரை கத்தியால் குத்திக் கொன்றது சேவல்: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: தெலங்கானாவில் சட்ட விரோதமாக நடந்த சேவல் சண்டையின்போது, தனது உரிமையாளரையே சேவல் கொன்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சேவல் சண்டை போட்டிகள் சட்ட விரோதமாக நடத்தப்படுகின்றன. போலீஸ் கண்ணில் படாத இடங்களில் ஒன்று சேரும் சேவல் உரிமையாளர்கள், பல லட்சம் ரூபாயை பந்தயம் கட்டி இந்த போட்டிகளை நடத்துகின்றனர். இந்த சண்டையில் சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டுவார்கள். 2 சேவல்களும் ஆக்ரோஷ்மாக சண்டையிடும்போது, இந்த கத்திகளால் பலத்த காயம் ஏற்படும். இதில், சில நேரங்களில் சேவல்கள் பரிதாபமாக இறப்பதும் உண்டு. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லோத்துனுர் என்ற இடத்தில், கடந்த வாரம் சட்ட விரோதமாக ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தியது.

இதில், 16க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது, ஒருவர் தனது சேவலை சண்டைக்கு தயார் செய்வதற்காக, அதன் கால்களில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சேவல் அவரிடம் தப்பியோட முயற்சித்தது. அதை அவர் பிடிக்க முயன்றபோது, அதன் கால்களில் கட்டப்பட்டு இருந்த கூர்மையான கத்தி, அவருடைய ஆணுறுப்பு பகுதியில் வெட்டியது. இதனால், அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கடுமையான ரத்த போக்கால் அவர் இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* சேவல் சண்டைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இருப்பினும், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக்களின் போது இந்த சண்டை சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது.

* குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் சேவல் சண்டை அதிகளவில் நடத்தப்படுகின்றன.

Related Stories: