நாடு முழுவதும் விலை நிர்ணயம் தனியார் மருத்துவமனைகளில் 250க்கு கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும், தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா தடுப்பூசி போட டோஸ் ஒன்றுக்கு 250 கட்டணமாக நிர்ணயித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், சுகாதாரத் துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 1 கோடியே 37 லட்சத்து 56 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இதர நோய் உடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள முன்வருபவர்கள் கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்ய சேது உள்ளிட்ட செயலிகள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதில், எந்தெந்த அரசு, தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19க்கான தடுப்பூசி போடப்படும் என்பது குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துக்கு ஒரு டோசுக்கு  150, சேவைக் கட்டணமாக 100 என மொத்தம்  250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டு கொள்ளலாம். மறு உத்தரவு வரும் வரை, இந்த தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சான்றிதழ்  கட்டாயம்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 10,000 அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி மையங்களாக செயல்படுகின்றன. இதர நோய் உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பதிவு பெற்ற மருத்துவரின் சான்றிதழுடன் தடுப்பூசி போட செல்ல வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>