ஐஎஸ்எல் அரையிறுதியில் யார்? கோவா-ஐதராபாத் இன்று மோதல்

பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் அரையிறுதிக்கு  கடைசி அணியாக முன்னேற  கோவா-ஐதராபாத் அணிகள் இன்று மல்லுக்கட்டுகின்றன. கோவாவில் நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. ஏடிகே மோகன்பகான், மும்பை சிட்டி எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டியில் கோவா, ஐதராபாத் அணிகள் உள்ளன.  தலா 19 போட்டிகளில் விளையாடி உள்ள  எப்சி கோவா 30 புள்ளியுடனும், ஐதராபாத் எப்சி 28 புள்ளியுடனும் உள்ளன. இந்த 2 அணிகளும் தங்கள் கடைசி லீக் போட்டியில் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இதில் வெற்றியுடன் 3 புள்ளிகளை பெறும்  அணி அரையிறுதிப் போட்டியை உறுதிச் செய்யும். தோல்வி அடையும் அணி லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான். அதே நேரத்தில்  போட்டி டிராவில் முடிந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அப்போது கோவா 31 புள்ளியுடன் அரையிறுதியை உறுதி செய்யும்.

எனவே வெற்றி மட்டுமல்ல டிராவும் கோவாவுக்கு சாதகமாக இருக்கும்.  அதனால் ஐதராபாத்  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே ஐதராபாத் வெற்றிக்கு அதிகம் முனைப்புக் காட்டும். அந்த அணி கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 4 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் டிராவும் கிடைத்தன. அந்த அணி கடைசியாக தோற்ற போட்டி கோவாவுக்கு எதிரான போட்டிதான். டிச.30ம் தேதி நடந்த அந்த முதல் சுற்று லீக் போட்டியில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியுள்ளது.

அதுமட்டுமல்ல கோவா கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 5 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது. அதனால் கோவாவின் கைதான் இப்போது ஓங்கியுள்ளது.

ஆனால் விளையாட்டில் ‘எதுவும்’ நடக்கும். அப்படி நடந்தால் 2வது சீசனில் விளையாடும் ஐதராபாத் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறும். இல்லாவிட்டால் 7வது சீசனில் விளையாடும் கோவா 6வது முறையாக அரையிறுதியில் விளையாடும்.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளிலும் கோவா அணிதான் வென்றுள்ளது. அவற்றில் கோவா 7 கோல்களும் ஐதராபாத் 2 கோல்களும் அடித்துள்ளன.

யாருக்கு முதலிடம்?

இன்று இரவு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான், மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.  புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இந்த அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. இன்று நடைபெறும் போட்டி, யாருக்கு முதலிடம் என்பதை உறுதிச் செய்யும்.

Related Stories: