காங்கிரசில் மீண்டும் குலாம் நபி ஆசாத் தலைமையில் தலை தூக்கும் அதிருப்தி கோஷ்டி: கட்சி பலவீனமாகி வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு

ஜம்மு: காங்கிரசில் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிருப்தி தலைவர்கள் மீண்டும், ‘கட்சி பலவீனமாக இருக்கிறது,’ என குரல் கொடுத்துள்ளனர். காங்கிரசில் மக்களவை தேர்தல் ேதால்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, ‘காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும், ’ என்று கட்சியின் 23 மூத்த தலைவர்கள், சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இப்பிரச்னை பேசி தீர்க்கப்பட்டதால் கட்சியில் அமைதி திரும்பியது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சில நாட்களுக்கு முன் தனது மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.

அப்போது, பிரதமர் மோடி அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார். தற்போது, ஆசாத் தலைமையில் மீண்டும் அதிருப்தி தலைவர்கள் ஒன்று சேர தொடங்கி உள்ளனர். ஜம்முவில் நேற்று மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், குலாம் நபி ஆசாத், கட்சியின் இதர மூத்த தலைவர்களான கபில் சிபல், மணீஷ் திவாரி, விவேக் தங்கா, ராஜ்பாப்பர், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கடந்தாண்டு சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள். தற்போது, இந்த அதிருப்தி தலைவர்கள் தங்களை, ‘ஜி-23’ என்று அழைத்துக் கொள்கின்றனர். விழாவில் பேசிய கபில் சிபல், ‘‘இது உண்மையை பேச வேண்டிய தருணம். எனவே, நான் உண்மையை பேசுகிறேன். காங்கிரஸ் தற்போது பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த முறை நாங்கள் அதை பலப்படுத்த ஒன்று சேர்ந்தோம்.

இப்போதும் அதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம்.  குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்களின் அனுபவத்தை கட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,’’ என்றார். இதேபோல், நிகழ்ச்சியில் பேசிய மற்ற தலைவர்களும் காங்கிரசின் செயல்பாடு பற்றி கடுமையாக விமர்சித்தனர். இதனால், காங்கிரசில் தலைமைக்கு எதிராக அதிருப்தி தலைவர்கள் மீண்டும் கிளம்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை’

இந்த நிகழ்ச்சியில் பேசிய குலாம் நபி ஆசாத், ‘‘மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்துதான் ஓய்வு பெற்றுள்ளேன். அரசியலில் இருந்து அல்ல. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் சேவையாற்றுவேன். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால், நமது அடையாளத்தை இழந்துள்ளோம். மீண்டும் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்கவும், இங்குள்ள மக்களின் வேலை வாய்ப்புகளையும், நில உரிமைகளையும் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன்,’’ என்றார்.

Related Stories:

>