வில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம்

வில்லியனூர்: புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளியை சேர்ந்தவர் ஆனந்தி(50). இவரது கணவர் ஆதிமூலம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சந்தியா(25) என்ற மகளும் பிரதீப் (எ) ராஜசேகர் (22) என்ற மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி சென்றுவிட்டதாயில், மகன் ராஜசேகருடன் வசித்து வருகிறார். ராஜசேகர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனியாக இருந்த ஆனந்தி மாலை 3.30 மணியளவில் வீட்டின் அருகே உள்ள சீமை கருவேல மரத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு நூல்கண்டு வடிவில் பெரிய உருளையான நாட்டு வெடிகுண்டு கீழே கிடந்துள்ளது. அதனை ஆனந்தி கையில் எடுத்தபோது தவறி கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆனந்தியின் இடது கை, கால், கண் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு ரத்தம் சொட்ட சொட்ட தனது வீட்டின் அருகே வந்த ஆனந்தியை சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் வேறு ஏதேனும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். அப்போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அப்பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>