இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி

உசிலம்பட்டி: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல், அவரது சொந்த ஊரில் உள்ள பண்ணை தோட்டத்தில் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் (88). இவர் நேற்று முன்தினம் உடல்நலம்  பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது உடல் சென்னையிலிருந்து நேற்று காலை 6 மணிக்கு சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணை தோட்ட வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அனைத்து கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.   இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இணை செயலாளர் கோவை எம்பி சுப்பராயன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், தேனி திமுக மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் மற்றும் பல்வேறு கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மதியம் 3 மணியளவில் பண்ணை தோட்டத்தில் அவரது துணைவியார் ஜாய்ஸ் கல்லறை அருகிலேயே, தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ‘‘போராட்டக் குணம் படைத்த, அப்பாவி மக்களின் பாதுகாவலனை இழந்து விட்டோமே’’ என்று கட்சியினரும், பொதுமக்களும், அஞ்சலி செலுத்தி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>