கூட்டணியில் சசிகலாவை சேர்க்க சொல்லி பிடிவாதம்: அதிமுக-பாஜ பேச்சுவார்த்தை தோல்வி: பாமவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: அமமுகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜ அடம் பிடிப்பதால், முதல்வர் எடப்பாடியுடன், பாஜ மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதே நேரத்தில் அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.  தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அட்டவணையை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கும் மிக குறைந்த நாட்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. திமுகவில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் ெதாகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் ஏற்கனவே பாமக, பாஜகவுடன் அதிமுக சார்பில் பல கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பாஜ தரப்பில் 60 தொகுதிகள் வரை கேட்கப்பட்டது. பாஜ மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசினார். அப்போது 100 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்து அதில் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஒரு தொகுதி கூட குறைய முடியாது என்றும் கறாராக கூறினார். அதே நேரத்தில் சிறிய கட்சிகளுக்கும், சசிகலா ஆதரவு பெற்ற அமமுகவுக்கும் நாங்கள் சீட் வழங்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா தெரிவித்தார். ஆனால் இதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. உங்களுக்கே இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கினால் பாமக, தேமுதிக, தமாகா அதிக தொகுதிகளை கேட்கும். எனவே, குறைவான தொகுதிகளை தான் ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் அமமுகவை சேர்க்க முடியாது என்றும் எடப்பாடி தெரிவித்தார்.

இதற்கிடையில், பாமகவும் 40 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அவர்களுடன் அதிமுக அமைச்சர்கள் குழு 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு குறைவான நாட்கள் உள்ளதால் அதிமுக மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அதிமுக முதலில் உள்ள பாஜகவை நேற்று காலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன் பேரில் மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது, பாஜகவினர் எங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கூறி தொகுதிக்கான பட்டியலையும் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு தொகுதிகளை உங்களுக்கு வழங்கினால் மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும். எனவே, 20 தொகுதிகள் வரை தர சம்மதித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுங்கள் என்றும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 தொகுதிகளாவது ஒதுக்குங்கள் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அமமுகவுக்கு நாங்கள் 20 தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உங்களுக்கு மட்டுமே கேளுங்கள். அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சசிகலாவை பற்றி எங்களிடம் பேசாதீர்கள் என்று தனது கண்டனத்தை முதல்வர் அப்போது பதிவு செய்தார். 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கறாராக முதல்வர் கூறிவிட்டார். 25 சீட்டுக்களை பெற பாஜக தலைவர்கள் சம்மதித்தனர். ஆனால் அமித்ஷா, சசிகலாவை எப்படியும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் அவர்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறி புறப்பட்டனர். அதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து  பாஜக குழுவினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்  ெசல்வத்தையும் அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீட்டு ேபச்சுவார்த்தை  தொடர்பாக பேசினர். அப்போது பாஜக குழுவினர் முதல்வரிடம்   தெரித்த கருத்துக்களை ஓபிஎஸ்சிடம் தெரிவித்தனர். இதற்கு ஓபிஎஸ்சும் சம்மதம் தெரிவிக்கவில்லை. முதல்வர் கருத்து தான் என்னுடைய கருத்து என்று கூறிவிட்டார். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர், துணை முதல்வரிடம் நடந்த பேச்சுவார்த்தை ேதால்வியில் முடிந்தது.

மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா இன்று காலை சென்னையில் தான் இருக்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை காரைக்காலில் நடைபெறும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர், பிற்பகல் 4 மணியளவில்  விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசுகிறார். எனவே முதல்வர், துணை முதல்வருடன் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட  விஷயங்கள் குறித்து பாஜ குழுவினர், அமித் ஷாவை  சந்தித்து தெரிவிக்க உள்ளனர். இதன்பிறகு அமித்ஷா கூறும் ஆலோசனைப்படி  மீண்டும், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அதே  நேரத்தில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை  கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அதிருப்தி  நிர்வாகிகளுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவே கூடாது என சமீபத்தில் தமிழகம் வந்த  மோடியை தனியாக சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். அதற்கு,  மோடியும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், சசிகலா தரப்பினர்  அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சசிகலா தரப்பு, ‘‘வரும்  தேர்தலில் உங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறோம். எங்களுக்கு 20  தொகுதிகள் கொடுங்கள். பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான  தேர்தல் செலவை நாங்களே செய்கிறோம்’’ என தெரிவித்தனர். இதற்கு அமித்ஷா  தரப்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், சசிகலா தரப்பினர்  நம்பிக்கையுடன் உள்ளனர். 18 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து வெளியேறி அமமுகவில் இணைந்தனர். அவர்களில் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் சேர்ந்து விட்டனர். பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் இறந்து விட்டார். இதனால் தற்போது தங்களது கட்சியில் உள்ள 15 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்களான செந்தமிழன், எஸ்.காமராஜ், திருச்சி மனோகரன், கோவை சேலஞ்சர் துரை, மாணிக்கராஜா ஆகிய 5 பேர் என 20 சீட்டுகள் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.  தற்போது, தேர்தல் தேதி அறிவித்துள்ளதால்  கூட்டணி, தொகுதி பங்கீடு முடிப்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. இதனால்,  அமித்ஷாவிடம் சசிகலா தரப்பினர் ரகசிய பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதாக  கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலா அதிமுக கூட்டணியில்  உள்ளாரா, இல்லையா என்பது தெரியவரும். கூட்டணி, தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் கையெழுத்தாகும் என கூறப்படுவதால் தேர்தல்  களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் பாமக சார்பில்  வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் பாமக  தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் 10.5 சதவீதம் தற்காலிக  இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமியை, அன்புமணி சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத்  தொடர்ந்து அதிமுக, பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடும்  நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில்  நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்  செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம்  மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாமக தரப்பில் இளைஞர் அணி தலைவர்  அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். தொடர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இபிஎஸ், ஓ.பி.எஸ்- பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவும், பாமகவும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கும், பாமகவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஓப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரான நானும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியும், பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கேமணி ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். நம்முடைய முதல்வர் முன்னிலையிலும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி முன்னிலையில் இன்று கையெழுத்திடப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இப்போது தொகுதி எண்ணிக்கை தான் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மற்றப்படி இரண்டு தரப்பிலும் நிர்வாகிகள் கூடி உட்கார்ந்து எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன தொகுதிகள் என்பது முடிவு எடுக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைப்பது குறித்து உங்களுக்கு தான் (பத்திரிக்கையாளர்) முதலில் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவதாக அதிமுக தலைவர்கள் கூறி வந்தனர். விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதிகள் தருகிறோம். பேச்சுவார்த்தை என்று இழுக்க வேண்டாம். ஒரே பேச்சுதான். சீட் வேண்டுமா, வேண்டாமா வேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் 10 சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டனர். இதனால் அவர்கள் முடிவு எடுக்காமல் உள்ளனர். மேலும் தமாகாவுக்கு 3, புதிய தமிழகத்துக்கு 2, புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனுக்கு தலா ஒரு சீட் ஒதுக்க அதிமுக முடிவு செய்து அவர்களிடம் கூறிவிட்டது. அதில் புதிய தமிழகத்தை தவிர மற்றவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர். பாஜக கூட்டணி அறிவிப்பு முடிந்தவுடன் மற்றவர்களுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அதிமுக தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

    

இந்நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரண்டு கட்சியினரும் பேசிக்கொண்டனர். தேமுதிக தரப்பில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். இதைக் கேட்டுக்கொண்ட அமைச்சர்கள் முதல்வர், துணை முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். நாளை இரண்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிமுக முடிவு செய்துள்ள தொகுதி பங்கீட்டு பட்டியல்

அதிமுக        169

பாஜக        25

பாமக        23

தேமுதிக        10

தமாகா        3

பு.த.        2

ஜான்பாண்டியன்    1

ஏ.சி.சண்முகம்    1

Related Stories:

>