தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

தாம்பரம் : தாம்பரம் அருகே முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த். எலக்ட்ரிசியன். இவரது மனைவி ஜெபசெல்வி. இவர்களுக்கு சாய்சரண் என்ற மூன்று வயது ஆண்குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் புறப்பட்டு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தை சாய்சரண் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், திடீரென குழந்தையைக் காணாததால்  அதிர்ச்சியடைந்த ஜெபசெல்வி பல்வேறு இடங்களில் தேடினார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, வீட்டிலிருந்து கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட தொட்டியில் சாய்சரண் விழுந்துகிடப்பது தெரியவந்தது.

மயக்க நிலையில் இருந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள்,  ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் விரைந்து வந்து சாய்சரணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>