பதவி இன்று வரும்; நாளை போகும்... ஆடாதடா... ஆடாதடா... மனிதா : அதிமுக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் புதிதாக பல்வேறு பதவிகள், பொறுப்புகளை அதிமுக மேலிடம் வழங்கியது. அதில் நீண்ட காலமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவிகள் வழங்காமல் மாற்று  கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கியுள்ளனர். இது அ.தி.மு.க.வினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதற்காக ஜெகதளா பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் அருவங்காடு  பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

போஸ்டர் ஒட்டிய சில மணி நேரத்தில் சிலர் போஸ்டர்களை கிழித்துள்ளனர். இதை கண்டித்து வீடியோ ஒன்றினை அ.தி.மு.க. நிர்வாகி வெளியிட்டுள்ளார்.அதில் போஸ்டரை கிழித்த நபர்களுக்கும், அ.தி.மு.க.வில் பதவியில் உள்ளவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் பதவி இன்று வரும் நாளை போகும் அதற்காக ஆட வேண்டாம் என  அ.தி.மு.க.வினருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த வீடியோ அ.தி.மு.க.வினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் பேரட்டி ராஜூ. படுகர் சமுதாயத்தை சேர்ந்த இவர் உறவினர்கள் மற்றும் படுகர் மக்களுக்கு  மட்டுமே கட்சி பதவி வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய நபர் வேறு பிரிவை சேர்ந்தவர் என்பதால், அந்த போஸ்டர்கள் அனைத்தையும் பேரட்டி ராஜூ கிழித்துள்ளார். இதனை  கண்டித்துதான் அ.தி.மு.க. நிர்வாகி வீடியோ வெளியிட்டுள்ளார்’’ என்றார். தற்போது அந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Related Stories:

>