×

மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு

சென்னை : மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என வரிசையாக அரசுப்பணியாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கி வருகின்றனர்.  இதனால், சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறு தமிழகம் போராட்டகளமாக மாறிவருவது  அவர்களிடத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், ரேசன்கடை ஊழியர்கள், லாரி ஓட்டுனர்கள், கால்டாக்சி  ஆட்டோ தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல் பொதுமக்களும் தங்களது ஊர்களில் சேதமடைந்து இருக்கும் சாலைகள், பழுதடைந்து கிடக்கும் மின்கம்பங்கள், சாக்கடைகால்வாய் திட்டங்கள், குடிநீர் பிரச்னைகள் போன்றவற்றை  நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதற்குள் தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.
மிகக்குறுகிய காலமே இருப்பதால் இனியும் காலம்தாழ்த்த வேண்டாம் என முடிவு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ெபாதுமக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் போன்ற  பல்வேறு விதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்று கூறி சென்னை, எழிலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல வாரியத்தை ஏற்படுத்த  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து இவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.

இதேபோல் 14வது ஊதிய உயர்வை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணபலன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு  போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த 18ம்  தேதி சென்னை குரோம்பேட்டையில் 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட நேரமாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வி அடைந்தது. இதையடுத்து கடந்த இரண்டு  நாட்களாக போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு நடந்து வருகிறது. இதில் தாங்கள் பணியாற்றும் அலுவலகங்களில் கணினி,  இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்களை உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மினி கிளினிக்குகள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களில் மருந்தாளுனர்கள் பணியிடம் உருவாக்கிட  வேண்டும். பதவி உயர்வு தேக்க நிலையை போக்கி, கூடுதல் பதவிஉயர்வு பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து  மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

இதேபோல் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தினந்தோறும் அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என  லாரி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் போராட்டத்தில் குதித்துனர். எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு  சாலைக்கு நிலம் எடுப்பது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையில் கூட போலீசார் தங்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும் என்று கூறி சங்கம் வேண்டும் என்று  கேட்டு வருகின்றனர். காவல்துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

டீசல் பெட்ரோல் விலை உயர்வு, பாஸ்டேக் கட்டணம், டோல்கேட் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து லாரி உரிமையாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பல்வேறு  தரப்பினரும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  மேலும் இதேநிலை நீடித்து விடுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தேர்தல் நேரத்தில் தமிழகமே போராட்டக்களமாக மாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Tamil Nadu , தமிழகம்
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...