தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் : சபாநாயகர் தனபால் புகழாரம்!!

சென்னை : எதிர்கட்சி தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக சட்டப்பேரவை தலைவர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார். 15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரை நிகழ்த்திய சபாநாயகர் தனபால், கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை சட்டப்பேரவை 167 கூடியதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற வரலாற்றுலேயே அனைத்து நாட்களும் அவைக்கு வந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பேரவையில் துணை நின்ற ஸ்டாலின், முக்கிய பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டதாக சபாநாயகர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதே போல், பேரவையில் நிறைவு நாள் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமது அரசுக்கு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 15வது சட்டப்பேரவை ஆனது மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 20 மணி நேரம் 25 நிமிடங்களும் எதிர்க்கட்சியினர் 36.30 மணி நேரம் உரையாற்றி உள்ளனர். ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களே கூடுதலாக 16 மணி நேரம் உரையாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவையில் அதிகமான கேள்விகளை கேட்டவர் என்ற பெருமையை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு பெற்றுள்ளார்.

Related Stories:

>