செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் கம்பெனி காரை திருடிய சென்னை டிரைவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில் தனியார் கார் கம்பெனிக்கு சொந்தமான சோதனை ஓட்ட காரை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவர் செங்கல்பட்டு, காண்டீபன் தெருவில் தங்கியிருந்து, மகேந்திரா சிட்டியில் தனியார் கார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இங்கு புதிதாக தயாரிக்கும் கார்களை சுப்பிரமணி சோதனை ஓட்டத்துக்கு எடுத்து செல்வது வழக்கம். இதேபோல், கடந்த ஒரு மாதத்துக்கு முன் சுப்பிரமணியிடம் புதிய வகை காரை சோதனை ஓட்டத்துக்காக நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்த காரை சோதனை ஓட்டத்துக்காக சுப்பிரமணி வெளியே எடுத்து சென்றுள்ளார். பின்னர் அந்த காருக்கு போலி சாவி தயாரித்து, அதை மட்டும் கம்பெனியில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். சுப்பிரமணியிடம் சோதனை ஓட்டத்துக்கு கொடுத்த கார் திரும்பி வரவில்லை என்பது தொழிற்சாலை நிர்வாகத்துக்கும் தெரியவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதிய வகை கார்களை வரிசையாக நிறுத்தி தொழிற்சாலை நிர்வாகம் கணக்கெடுத்தது.

அதில், ஒரு கார் குறைவாக இருப்பதை கண்டறிந்ததில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த காரை சுப்பிரமணி சோதனை ஓட்டத்துக்கு எடுத்து சென்றதும், பின்னர் அந்த கார் மீண்டும் கம்பெனிக்கு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.இதற்கிடையே கடந்த 2 நாட்களாக சுப்பிரமணி வேலைக்கு வராததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் கார் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுப்பிரமணி குறித்து விசாரித்தனர்.மேலும் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் முனியன், சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், நேற்று சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்த சுப்பிரமணியை வளைத்து பிடித்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில், அவர் திருடிய காருக்கு போலி நம்பர் பிளேட் தயாரித்து அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>