4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அண்ணன் ஓபிஎஸ்-க்கு எனது மனமார்ந்த நன்றி : முதல்வர் பழனிசாமி உருக்கம்!!

சென்னை : 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருந்ததாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு மாதம்தான் இருக்கும், மூன்று மாதங்கள்தான் இருக்கும், ஆறு மாதங்கள்தான் இருக்குமென்று அவதூறான, உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை செய்து வந்தார்கள். அதையெல்லாம் முறியடித்து, நான்காண்டு காலம் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை என் தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. நான் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் இன்றைக்கு வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற அளவிற்கு உயர்ந்து ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர்கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசு அம்மாவின் அரசு என்பதை நாங்கள் எடுத்துக்காட்டியுள்ளோம்.

    

இந்தச் சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரித்துக் கொள்கிறேன். அதேபோல, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தங்கள் துறைகளில் திறமையாக செயல்பட்டு அதன் மூலம் தேசிய அளவில் விருதுகளைப் பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கியமைக்கு மனமார, உளமார இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எனக்குப் பின்னாலும் கழகம் நூறாண்டு காலம் ஆளும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார்கள். அதற்கேற்ப, இந்த சோதனையான நேரத்தில், நான்காண்டு காலம் நிறைவுபெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு சிறந்த ஆட்சி, நிர்வாகம் அமைவதற்கு உறுதுணையாக விளங்கிய கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, ஆளும் கட்சி, எதிர்க் கட்சியிடையே சூடான விவாதங்கள் நடைபெற்றபோது, நடுநிலையாக இருந்து, பக்குவமாக, ஆளுமையாக, திறமையாக செயல்பட்டு, தமிழக சட்டமன்றம் ஒரு முன்மாதிரி சட்டமன்றம் என்று விளங்குகிற அளவிற்கு, அவையை நடத்திய மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அவருக்குத் துணையாக இருந்த சட்டப்பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும், அரசுக் கொறடா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    

அதேபோல், மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்பாக செயல்படுவதற்கு அனைத்து வழிகளிலும் துணை நின்ற உயர் அதிகாரிகளுக்கும், அரசின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு செவ்வனே எடுத்துச் சென்று அரசுக்கு நற்பெயரை தேடித் தந்த அரசு அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, மாண்புமிகு அம்மா அரசின் திட்டங்கள் சம்பந்தமாக ஒவ்வொரு துறையிலிருந்து வருகின்ற கோப்புகளை என்னிடத்தில் வேகமாக, துரிதமாக, உரிய நேரத்தில் சமர்ப்பித்து, அனுமதி பெற்று அனுப்பி வைத்த என்னுடைய துறை செயலாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மாவின் அரசு நான்கு ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறபோது, பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். 50 ஆண்டு காலம் தீர்க்கப்படாத காவேரி நதிநீர்ப் பிரச்சனையை சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவின் அரசு. டெல்டா பாசன விவசாயிகள் பாதிப்படுகின்ற சூழ்நிலை வந்தபோது, மாண்புமிகு அம்மாவின் அரசு டெல்டா பாசன விவசாயிகளுக்கு அரணாக இருந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கொடுத்து, வேளாண் பெருமக்களை பாதுகாத்த அரசும் அம்மாவின் அரசுதான். அதேபோல, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். புயல், வெள்ளம் வந்தபோதும், பருவம் தவறி மழை பெய்தபோதும் வேளாண் பெருமக்கள் பாதிக்கப்பட்டபோது, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளை அரவணைத்து, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதுபோல, விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதமடைகின்றபோது, நாட்டிலேயே அதிகமாக இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்த அரசும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு வேளாண் பெருமக்களை கண்ணை இமை காப்பது போல காத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். அந்த தடையில்லா மின்சாரத்தை வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கிய அரசும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதேபோல, கல்வியில் வளர்ச்சி, புரட்சியை ஏற்படுத்தியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதிகமான சட்டக் கல்லூரிகளை திறந்திருக்கின்றது. ஓரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றோம். 3 கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி சாதனை படைத்திருக்கின்றோம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி என அதிகமான கல்லூரிகளைத் திறந்து, இன்றைக்கு உயர்க்கல்வி படிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை நாங்கள் பெற்றிருக்கின்றோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்து, மாண்புமிகு அம்மாவின் கனவை நனவாக்கிய அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.

அதுமட்டுமல்லாமல், தேசத்திற்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு மணிமண்டபங்கள், திருவுருவச்சிலைகள் அமைத்தும், அரசு விழாக்கள் எடுத்தும், அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக சட்டமன்றத்தில் அவர்களுடைய திருவுருவப் படங்களை திறந்தும் பெருமை சேர்த்த அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களையெல்லாம் இங்கே அமர வைத்த எங்களுடைய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபத்தை அமைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த, கோயிலாக திகழக்கூடிய வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, இப்படி மாண்புமிகு அம்மாவின் அரசு நான் முதலமைச்சராக ஏற்ற காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு சாதனைகளைப் புரிந்து, சாதனை படைத்த அரசாக திகழ்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவுகளை நனவாக்குகின்ற விதமாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் அம்மாவின் அரசு அமைப்போம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்து, எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து அமைகிறேன்.    

நன்றி, வணக்கம்.

Related Stories:

>