×

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க டெண்டர் விட்டு ஓராண்டு ஆகியும் பணிகள் துவங்கவில்லை-அதிகாரிகள் அலட்சியம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியில் 1, 2, 9, 10, 15 வார்டு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பகுதிகளில் தார்சாலை மற்றும்  கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். அதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் ரூ.4 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.

அதனையடுத்து கேஏஜி நகர், விஜயலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், மிளகாய்தோட்டம், கிருஷ்ணா நகர், நாகை பிள்ளை நகர், ஸ்டென்மேரி பள்ளி தெரு, மற்றொரு கிருஷ்ணா நகர் ஆகிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. அதில் இரண்டு அரசு ஒப்பந்ததாரர்கள் ஆளும் கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் டெண்டர் எடுத்தனர். தார்சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித பணிகளையும் ஒப்பந்ததாரர்கள்  துவங்கவில்லை.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டி நகராட்சி பொறியாளரிடம் முறையிட்டும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பணிகளை துவங்காமல் காலம் கடத்தி வரும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு டெண்டர் பணிகளை ரத்து செய்து மாற்று டெண்டர் மூலம் பணிகள் மேற்கொள்ள கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Dharshal , Kallakurichi: Roads in wards 1, 2, 9, 10, 15 in Kallakurichi municipality are bombed. Darsala and sewage in these areas
× RELATED போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா...