சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிடக்கோரி கருப்பு கொடியுடன் குளத்தில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

நாகை : சரபங்கா நீரேற்று திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி நாகை அருகே குளத்தில் இறங்கி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் சரபங்கா நீரேற்று திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்நிலையில் சரபங்கா திட்டத்தை கைவிடக்கோரி நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா மீனம்பநல்லூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஏந்தியவாறு குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர்- சரபங்கா நீரேற்று திட்டத்தால் டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் பாலைவனமாகும். காவிரியை நம்பியுள்ள டெல்டா மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வறட்சியில் இருந்து காக்க சரபங்கா நீரேற்று திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சபாநாதன், இணை செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குணசீலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் தர் கூறியதாவது: மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை தூர்வாரும் பணியோ, ஆழப்படுத்தும் பணியோ நடக்கவில்லை. இந்நிலையில் சரபங்கா திட்டம் மூலம் உபரிநீர் எடுப்பது மூலம் காவிரியை மட்டுமே நம்பி வாழ்கிற டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். இதனால் கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கும்.

எனவே சரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும். இல்லையெனில் டெல்டா மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Related Stories:

>