விளக்குதூண் கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்-தடுத்த 8 பேரிடம் போலீசார் விசாரணை

மணப்பாறை : மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு பகுதியில் நடிகர் ஒருவரின் வீட்டருகே தெற்கு மந்தை என்ற இடத்தில் 3 அடி உயர திண்ணை சுவர் எழுப்பி அதில் வேல் மற்றும் விளக்கு தூண் கம்பம் வைத்து கருப்பசாமி தெய்வத்தை வழிபட்டு வந்தனர். இந்த விளக்கு தூண் கம்பத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். கடந்த ஜனவரி 17ம்தேதி இரவு விளக்கு கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் இடித்ததாக புத்தாநத்தம் போலீசில் ஜனவரி 18ம்தேதி பூசாரி செல்வம் என்பவர் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, மணப்பாறை தாசில்தார் லஜபதிராஜ் தலைமையில் வருவாய்த்துறையினரும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பண்ணப்பட்டி ஊராட்சி பணியாளர்கள், புத்தாநத்தம் போலீசார் என ஏராளமானோர் அந்த விளக்கு கம்பம் உள்ள பகுதிக்கு திடீர் என வந்தனர்.

பின்னர் அந்த இடத்தை சுற்றி அமைக்கப்பட்ட கல்தூணை அகற்ற முயன்றனர். இதற்கு அந்த விளக்கு கம்பத்தை பராமரிக்கும் செல்வம் பூசாரி, சக்திவேல் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து செல்வம் பூசாரி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து புத்தாநத்தம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதன் பின்னர், ஊராட்சி பணியாளர்கள் மூலம் விளக்கு தூண் கம்பம் அகற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: