மதுரை கலெக்டர் அலுவலக மரத்தில் ஏறி மக்கள் நலப்பணியாளர் தற்கொலை முயற்சி

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக மரத்தில் ஏறி மக்கள் நலப்பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 13,500 மக்கள் நல பணியாளர்களை கடந்த 2011ல் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 4ம் தேதி முதல் மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் இருந்த கோவில்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்பவர் நேற்று திடீரென்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி உச்சிக்கு சென்று, ‘பறித்த வேலையை கொடு. இல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்’ என கோஷம் போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் இருந்த மாநில தலைவர் செல்லப்பாண்டி, நிர்வாகி மாரிமுத்து மற்றும் பெண் மக்கள் நலப்பணியாளர்கள் அவரிடம், ‘‘தற்கொலை வேண்டாம். கீழே இறங்குங்கள்’’ என கோரினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். பின்பு அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர் ஒருவர் மரத்தில் ஏற, தமிழரசன் மேலும் மரத்தில் மற்றொரு பகுதிக்கு சென்று மின்கம்பியில் கையை வைத்தார்.

ஏற்கனவே போராட்டத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் உயிர் தப்பினார். ஒரு மணி நேர போராட்டத்தினை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் திடீரென்று அதிரடியாக மரத்தில் ஏறி அவர் கீழே குதிக்காதபடி பிடித்து கயிற்றால் கட்டி கீழே இறக்கினர். பின்பு முதலுதவி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் ஒரு மணி நேரத்திற்கு மேல் பதற்றத்துடன் காணப்பட்டது. போராட்டம் நடைபெற்ற போது, கலெக்டர் அன்பழகன் அலுவலகம் வந்தார். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல், தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக அலுவலகத்திற்கு சென்றார்.

Related Stories: