கடலாடியிலிருந்து கோவிலாங்குளத்திற்கு ஆமை வேகத்தில் நகரும் சாலை அமைக்கும் பணி-விபத்துகள் அதிகரிப்பு

சாயல்குடி :கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் செல்லும் வழியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல சுமார் 14 கி.மீ தொலைவிற்கு சாலை உள்ளது. இந்த சாலையை மங்களம், ஆப்பனூர், தெற்கு கொட்டகை, கொம்பூதி,  காத்தாகுளம், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முதற்கட்டமாக கொம்பூதியிலிருந்து மலட்டாறு பாலம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக மலட்டாறு பாலத்திலிருந்து கடலாடி வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மெக்டம் கலந்த ஜல்லிக்கற்கள் சாலையில் பரப்பி விடப்பட்டுள்ளது.

ஆனால், தார் ஊற்றாமல் ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. இதனால் கூர்மையான ஜல்லிக்கற்கள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கி வருகிறது. மேலும் தூசு, துகள்கள் பறந்து வருவதால் சாலையோரம் உள்ள வீடுகளில் குடியிருக்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன்  டூவீலரில் செல்பவர்கள் ஜல்லிக்கற்கள் இடறி தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.

மேலும் கடலாடி தேவர்நகரில் காவிரி குடிநீர் குழாய் உள்ளது. இதனை தேவர்நகர், மங்களம், பூலித்தேவன்நகர் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் குடங்களை ஜல்லிக்கற்கள் பரப்பி கிடப்பதால் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையைப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: