ஜோலார்பேட்டை அருகே 2 ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு, டேங்குகள் பழுதானதால் 6 மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள்-விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே 2 ஊராட்சிகளில் பழுதடைந்த ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க்குகளால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 6 மாதமாக குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், கட்டேரி ஊராட்சிகளில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைத்து மினி டேங்க்குகள் மூலமும், மேல் நிலை நீர் தேக்க தொட்டி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு கோடை வறட்சியின் காரணமாக பல்வேறு ஆழ்துளை கிணறுகள், மினி டேங்க்குகள் போன்றவை பழுதாகின. இதனால் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கலாஆஞ்சி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், பலமாதங்களாகியும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம்.அதன்பிறகு, அனைத்து கிராம பகுதிக்கும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த இரண்டு ஊராட்சிகளிலும் ஊராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீர் போதுமான அளவு கிடைக்கவில்ைலை. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியும், அருகிலுள் ஊராட்சிக்கு சென்றும் கொண்டு வந்து பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.  

இந்நிலையில், தற்போது கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கிரித்தக்கா, இந்திரா நகர் காலனி, கலர் வட்டம், கூலிஎருது வட்டம் உள்ளிட்ட பகுதியிலும், அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பூக்காரன் வட்டம் வரத கவுண்டர் வட்டம், தர்மகர்த்தா வட்டம், மூசூல் வட்டம், சின்னகோடியூர் வி.எம்.வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 14 ஆழ்துளை கிணறுகள், 27 மினி டேங்க்குகள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கலாஆஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் மினி டேங்க்குகளை சீரமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: