ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் அவதி

ஆற்காடு :  ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழிற்சங்கங்கள் சார்பில்   தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  வந்தது. இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம்  முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

ஆற்காடு அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து  தினமும் 93 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் நேற்று முன்தினம் மொத்தம் 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பஸ்களை இயக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று 9 டவுன் பஸ்கள் மற்றும் 4 அரசு பஸ்கள் என மொத்தம் 13பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பல  கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால்  மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நீண்ட நேரம்  காத்திருந்தும், இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு  வாகனங்களிலும், நடந்து நீண்ட தூரம் வந்து தனியார் பஸ்கள் மற்றும் அப்போது செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்தனர்.

மேலும் ஆற்காடு பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் பஸ்களில் ஏறி சென்றனர். மேலும் கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வருவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

Related Stories: