காவேரிப்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடக்கிறது பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் வரை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை ஒட்டியுள்ள நிலங்கள், கடைகள், வீடுகள், பஸ் நிலையம் உள்ளிட்டவை அப்புறப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையமும் நெடுஞ்சாலை பணிக்காக இடித்து அகற்றப்பட்டு ₹3 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தரைதளத்தில் வாகன நிறுத்துமிடம், கடைகள், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேல்ஆகியும் ஆமை வேகத்தில் கட்டுமான பணிகள்  நடைபெற்று வருகிறது.  இதனால் வெயில், மழைக்காலங்களில் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு இடமின்றியும், கழிவறையும் இல்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே அங்கு கடையை வாடகை எடுத்து வியாபாரம் செய்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பஸ் ஏறுவதற்கு சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இக்கட்டிடத்தின் பணிகளை பார்வையிட்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: