குடியாத்தம் அரசு கல்லூரி மாணவி தேசிய அளவிலான பாரா தடகள போட்டிக்கு தேர்வு

குடியாத்தம் : குடியாத்தம் அடுத்த  பிச்சனூர், காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தரம்-சுலோச்சனா தம்பதி. இருவரும் கூலித்தொழிலாளிகள்.  இவரது மகள் ரம்யா, மாற்றுத்திறனாளி. இவர் குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கலைக்கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா வேலூரில் பாரா கல்லூரி மாணவர்களுக்கு நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். தொடர்ந்து, கோவை தனியார் கல்லூரியில் கடந்த 14, 15, 16ம் தேதிகளில் நடந்த மாநில அளவிலான பாரா தடகள சேம்பியன்ஷிப்-2021 போட்டியில் கலந்துகொண்டார். அதில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில்  தங்க பதக்கம் வென்றார். மேலும், 200 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டி கலந்து கொள்ள மாணவி ரம்யா தேர்வாகியுள்ளார். மாணவியை கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

இதுகுறித்து ரம்யா கூறுகையில், `தனது தாய் தந்தை இருவரும் கூலி வேலை செய்தாலும் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். மேலும், எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் எனக்கு அதிகம் ஊக்கம் அளித்தனர். இதனால்தான் நான் வெற்றி பெற்றேன். மேலும், எனக்கு அரசாங்கம் உதவி செய்தால் நான் ஒலிம்பிக் வரை சென்று சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றார்.

Related Stories: