லாரி மோதி டிரைவர் பலி எதிரொலி டிப்பர் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்-செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு : வெம்பாக்கம் தாலுகா வடகல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால், இவரது மகன் சந்திரசேகர்(34), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் நேற்று காலை 7.30 மணிக்கு தனது பைக்கில் சொந்த வேலையாக மாமண்டூர் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, மாமண்டூர்- சுருட்டல் சாலையில் எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி சந்திரசேகர் பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சந்திரசேகரின் சகோதரர் வேல்முருகன், தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மாமண்டூர்- சுருட்டல் சாலையில், கல் குவாரியில் இருந்து வரும் டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது.

எனவே அவ்வழியாக வரும் லாரிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்று கூறி, சந்திரசேகரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புதுப்பாளையம் கூட்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு டிப்பர் லாரிகளை மெதுவாக இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: