போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 2ம் நாளாக 80 சதவீத பஸ் இயங்கவில்லை

திருப்பூர் :  திருப்பூரில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் திருப்பூரில் 2ம் நாளாக நேற்று 80 சதவீத பஸ்கள் நேற்று இயங்கவில்லை.தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2ம் நாளாக போராட்டம் நடைபெற்றது.

 இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த 2ம் நாள் போராட்டத்தில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின. அதிலும், மாநகரில் 155 அரசு பஸ்கள் உள்ள நிலையில் 33 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். அதே வேளையில், தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

வேலை நிறுத்தம் காரணமாக காங்கயம் ரோடு பணிமனை அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக வணிகப்பிரிவு மேலாளர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 520 பஸ்களில் 50 சதவீதம் இயக்கப்படுகிறது, என்றார்.

பொங்கலூர்:  பல்லடம் பேருந்து பணிமனை நிலையம் முன்பு தொமுக, ஏஐடியுசி, சிஐடியு, நேதாஜி தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம்,தேமுதிக தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொமுச தலைவர் ஆனந்தன், செயலாளர் சிவசுப்பிரமணியன், ஏஐடியுசி பரமசிவம், சிஐடியு சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று திருப்பூர் காங்கயம் ரோட்டிலுள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் செல்லத்துறை தலைமை வகித்தார். தொமுச நிர்வாகி மோகன சுந்தரம், ஏஐடியுசி நிர்வாகி குமரேசன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Related Stories: