மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்-கோட்டூரில் நடந்தது

மன்னார்குடி : மேட்டூர் சரபங்கா உபரி நீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூரில் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் கூறியது: மேட்டூர் அணை சரபங்கா உபரிநீர் திட்டம் என்கிற பெயரில் மேட்டூர் அணை இடது கரையை உடைத்து சட்டத்திற்குப் புறம்பாக பாசனத் தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான திட்டத்தை சுயநலத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்திருக்கிறார்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டாவில் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். தமிழகம் முழுவதிலும் 30 மாவட்டங்களில் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதாரம் பறிபோகும்.காவிரியில் கர்நாடகம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அனைத்து அணை களின் நிர்வாக அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தனது அரசியல் சுயலாபத்திற்காக மட்டுமின்றி தனது பகுதியில் வாங்கி குவித்து இருக்கக்கூடிய நிலங்களுக்கு பாசன தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என்ற சுயநல நோக்கோடு அறிவித்து இருக்கிறார்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது மத்திய, மாநில அரசுகள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முன்வர வேண்டும்.இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு இதுவரையிலும் விசாரணைக்கு வராமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் அணை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த காவிரி மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க மறுக்கிறது. இத்திட்டம் குறித்து விவாதத்தை மூடி மறைப்பதற்காக அதனுடைய கூட்டம் 4 மாதங் களுக்கு மேலாக கூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏற்கனவே சரபங்கா திட்டத்தை அணை உடைத்து நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிக்குமானால் கர்நாடகம் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்திட்டம் மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அவமதித்து இருக்கிறது. இதன் மூலம் 50 ஆண்டு காலம் போராடி முன்னாள் முதல்வர் ஜெயலலித பெற்றுக்கொடுத்த உரிமையை சரபங்கா திட்டம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி பறிகொடுத்து இருக்கிறார்.

உபரி நீர் என்பது மேட்டூர் அணையின் 16 கண் மதகின் மூலம் கொள்ளப்படும். ஆனால், இன்று உபரி நீரின்றி அணையில் இருப்பில் உள்ள தண்ணீரை கரையை உடைத்து பயன்படுத்துவது அவரது அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது.அப்படி உபரிநீர் தான் பயன்படுத்துவது உண்மையாக இருக்குமேயானால் 16 கண் மதகுக்கு கீழே நீரேற்று நிலையம் அமைத்து பயன்படுத்த வேண்டும். உண்மை இவ்வாறு இருக்க அணையை உடைப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரும் துரோகம் ஆகும். இதன் மூலம் தமிழகத்தில் பிரிவினையை உருவாக்கும்.

எடப்பாடி அரசு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளை யாடுகிறது. இத்திட்டத்தை கைவிடும் வரையிலும் காவிரி டெல்டாவில் ஓயமாட்டோம். தமிழக சட்டமன்ற தேர்தலில் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பிஆர் பாண்டியன் கூறினார்.

திருவாரூர்:  திருவாரூர் அருகே மாவூர் பகுதியில் காவிரி விவசாய  சங்க மாவட்டத் தலைவர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மேட்டூர்  சரபங்கா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நிறைவேற்றிய முதல்வரை  கண்டித்தும் ஏராளமானோர் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதேபோல குடவாசல் தாலுகா ஓகை பகுதியிலும், தமிழக காவிரி விவசாயிகள்  கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: