தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றன. நாஞ்சிக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் சிவன் ராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் கோட்டாட்சியர் வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் 750 காளைகளும், 450க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

12 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் காலையிலேயே ஏராளமான மாடுபிடி வீரர்களும், அதேபோல காளைகளும் பங்கேற்று தற்போது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் விதிமுறைகள் என்பது அமலில் உள்ளதால் இந்த போட்டி நடைபெறுமா என நேற்று இரவு 11 மணி வரை குழப்பத்தில் இருந்த சூழ்நிலையில் கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் இதற்கு சிறப்பு அனுமதி என்பதை அளித்தார்கள். அனுமதியை அளித்ததோடு மட்டுமல்லாமல் பரிசு வழங்குபவரின் பெயரோ, கட்சியின் பெயரோ, தனிப்பட்ட நபரின் பெயரையோ அறிவிக்காமல் பரிசுகளை வழங்க வேண்டும். அதேபோல காளையை கொண்டு வருபவர்களுடைய பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும். அவருடைய பின்புலத்தை அறிவிக்க கூடாது என்ற அறிவுறுத்தல்களின் படி இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

நாஞ்சிக்கோட்டையில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 3 மணி வரையிலே 750 காளைகள் அவிழ்த்து சாதனை படைத்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரக்கூடிய அனைத்து மாடுபிடி வீரர்களும் கட்டாயமாக கொரோனா சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அதேபோன்று வரக்கூடிய காளைகளுக்கும் கால்நடை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து உரிய சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது வரை 750 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் என்பது தொடர்ந்து வந்துகொண்டுள்ளன.

Related Stories: