மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல்.. பாஜக விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?: முதல்வர் மம்தா கேள்வி

கொல்கத்தா : பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆலோசனையின் படி, மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக என அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதில் தமிழகம், கேரளம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாகவும் அசாமில் 3 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார்.

இதையடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தாம் மரியாதை கொடுப்பதாக கூறினார். மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இத்தனை கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்றால் மக்கள் எங்கே செல்வார்கள் என்று கேட்டுள்ள அவர், பாஜகவின் விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை தனது சொந்த மாநிலமாக நினைக்க வேண்டும் என்றும் பாஜக கண்ணோட்டத்தில் இருந்து மேற்கு வங்க தேர்தலை பார்க்கக் கூடாது என்றும் மம்தா பேனர்ஜி கேட்டுக் கொண்டார். பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாநிலத் தேர்தலுக்காக அவர்களுடைய பதவியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் ஏதேனும் தவறான திட்டங்கள் உள்ளதா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories:

>