19 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இந்த ஆண்டின் முதல் ராக்கெட் : 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது!!

சென்னை: பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அந்தவகையில், பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை இஸ்ரோ ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

அமசோனியா 1 செயற்கைகோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.

இதில், அமசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். இந்த செயற்கைகோள் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு, பிரேசில் நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவும். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட் ஆகும். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட். இதேபோல், பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இந்த ஆண்டின் முதல் திட்டமாகும்.

Related Stories: